×

வடமாநில தொழிலாளர்களை தீவிரமாக கண்காணிக்கவும்  - விஜயகாந்த் வலியுறுத்தல்.. 

 


தமிழகத்திற்கு வரும் வடமாநில தொழிலாளர்களை தமிழக அரசும் காவல்துறையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர்  விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.  

தமிழகத்தில் அண்மைக்காலமாக  வடமாநிலத்தவர்கள் சிலர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது, தமிழர்களை தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்  தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெரம்பூர் நகைக்கடை ஒன்றின் கதவை உடைத்து, 5 கோடி மதிப்பிலான நகைகளை வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது,  திருவண்ணாமலையில் ஹரியானா கொள்ளையர்கள் வங்கி ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்தது , கோவையில் தமிழக மாணவர்களை வட மாநில இளைஞர்கள் தாக்கியது போன்ற சம்பவங்கள் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன.  

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் சமீபகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.தமிழகத்தில் ஏற்கெனவே வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற குற்றச் சம்பவங்களைத் தடுக்க, வேலை தேடி தமிழகத்துக்கு வரும் வடமாநில தொழிலாளர்களை காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், மக்கள் அச்சமின்றி வாழவும் காவல் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.