×

தெலுங்கு சினிமாவில் விஜய் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல- விஜய பிரபாகரன்

 

மழை வெள்ள காலத்தில் திமுகவின் செயல்பாடுகள் வரவேற்கும் வகையில் உள்ளது. ஆனால் நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என  தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அவரிடம் விவசாயிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அழுகிய பயிர்களை காண்பித்து வேதனையை வெளிப்படுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய பிரபாகரன், “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 30,000 வழங்க தேமுதிக வலியுறுத்துகிறது. அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்காக்களுக்கு நிவாரணதொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை குத்தாலம்  தாலுகாக்களுக்கும் நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும். சென்னை உள்பட மயிலாடுதுறை உள்ளிட்ட மழை பாதித்த மாவட்டங்களில் தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேமுதிக வரவேற்பு தெரிவிக்கிறது.
 
உடனடியாக அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். தெலுங்கு சினிமாவில் விஜய் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் அனைத்து மொழி படங்களும் வரவேற்கப்பட்டு வெற்றியடைந்துள்ளன. அனைத்து மாநிலங்களிலும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது  ஏற்புடையதல்ல. இதனால் சினிமாத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்” எனக் கூறினார்.