இன்னும் 20 ஆண்டுகளுக்கு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக இருப்பார் - அமைச்சர் என்.ஆனந்த்..!
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில், அதிமுக முன்னாள் எம்.பி.க்கள் பாலகங்கா, இளவரசன் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருநெல்வேலி முன்னாள் மேயர் விஜயலட்சுமி, அதிமுக சிறுபான்மைப் பிரிவு நிர்வாகி ஜான் மகேந்திரன், ஆண்டிப்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. தவசி, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி உள்ளிட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
அவர்களை அமைச்சர் என்.ஆனந்த், கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் தமிழன் பார்த்திபன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், "தவெகவில் இணையும் அனைவருக்கும் மரியாதைக் கொடுக்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். உங்களுக்கு உண்டான பதவிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து உங்களுக்கு என்னென்ன பதவிகளைத் தர வேண்டும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்.
எந்தவொரு அமைச்சரோ, எந்தவொரு சட்டமன்ற உறுப்பினரோ தவறு செய்ய மாட்டோம்; தவறு செய்தோம் என்று சொன்னால் அடுத்த வினாடியே அந்த பதவியில் எங்களை இருக்க விடமாட்டார். அதுதான் தமிழ்நாடு முதலமைச்சர். தொகுதியில் நிலவும் மக்கள் பிரச்சனைகளைக் கூறினால் உடனடியாகத் தீர்வுக் காணப்படும். உங்களுடன் எப்போதும் இருப்போம் என்று தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். தவெக நிர்வாகிகளுடன் இணைந்துச் செயல்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து வருகிற உள்ளாட்சித் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவோம் என்று சபதம் ஏற்போம்.
இன்னும் 20 ஆண்டுகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக இருப்பார். இதனால் அனைவருக்கும் ஒரே பயம். இப்படியே விட்டுவிட்டால் அவ்வளவு தான் போச்சு என்று நினைக்கிறார்கள். ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்களும் உங்கள் மாதிரி சாதாரண தொண்டன் தான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் பாகுபாடு பார்க்க மாட்டோம். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் எங்களை அப்படித்தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கூறினால் அதற்கு தீர்வுக் காண தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.விஜயதரணி, "தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை அன்போடு அரவணைத்துச் சேர்த்துக் கொண்டனர். தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும், நேர்மையான ஆட்சியைத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கில் இக்கட்சி செயல்படுகிறது.
போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற சபதத்தை ஏற்று, பெண்களின் பாதுகாப்பை உயர்த்திப் பிடிக்கும் ஒரு சிறந்த தலைவராக விஜய் விளங்குகிறார். தமிழ்நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி தவெகவிற்கு முழுமையாக உள்ளது. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்தியாவை வழிநடத்தக்கூடிய முக்கிய இடத்தில் தலைவர் விஜய் இருப்பார் என்பதை நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த இரண்டரை ஆண்டு காலம் பாஜகவில் எனக்கு எந்தப் பணியும் இல்லாமல் இருந்தது. அரசியலில் உழைப்பும், மக்கள் பணியும் மிக முக்கியம். என்னைப் போன்ற உழைக்கக் கூடியவர்களுக்கு தவெக ஒரு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. எங்கள் உழைப்பு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து எங்களை அழைத்திருக்கிறார்கள். நிச்சயமாக தவெக ஆட்சி, இந்திய நாடே திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு சிறந்த ஆட்சியாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதரணி, கடந்த 2024- ஆம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டிருந்தார். பின்னர் அக்கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
தவெகவில் இணைந்த ஆல் இந்தியா சிந்தாரிக் பெந்தோகஸ் சபைகளின் தலைவர் பேராயர் ஜோஸ்வா இமானுவேல் அளித்த பேட்டியில், "கடந்த 21 ஆண்டுகளாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் பிரிவில் பயணித்து பல்வேறு பணிகளைச் செய்து வந்தேன். ஆனால், தற்போதைய சூழலில் மக்களின் நலனுக்காகவும், திருச்சபைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காகவும் ஒரு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது. சிறுபான்மையினருக்கான ஆட்சி என்று சொன்னதால்தான் இத்தனை காலம் திமுகவோடு பயணித்தோம். ஆனால், சிறுபான்மையினரின் நலன் மற்றும் உரிமைகளுக்காக எப்போது அணுகினாலும், உரிமைகள் பறிக்கப்படும் சூழலே நிலவுகிறது. திமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே கசப்பான உண்மை" எனத் தெரிவித்துள்ளார்.
தவெகவில் இணைந்த நகைச்சுவை நடிகர் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி இனி தமிழ்நாட்டில் தொடரும். உச்ச வருமானத்தை விட்டுவிட்டு சேவை செய்யும் மனப்பான்மை இனி தலைவர் வழியில் ஒவ்வொரு வரும் பின்பற்ற வேண்டும்; தமிழ்நாடு சிங்கப்பூராக விரைவில் ஆக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.