தமிழக முதல்வரான பிறகு முதல் முறையாக இன்று திருச்சி வருகிறார் விஜய்...!
தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், இரு தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடினார். பின்னர் கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இரு தொகுதிகளில் வெற்றி பெறும் தலைவர்கள் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி, முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்த திருச்சி மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதல்வர் விஜய் இன்று (ஜூன் 1) திருச்சி வருகை தர உள்ளார். இதற்காக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோசப் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.