விஜய் VS ஸ்டாலின் : முதல்வரின் சொத்து மதிப்பு VS விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு..!
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (மார்ச் 30) தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர்.
முதல்வர் வேட்பாளர்களாக இருக்கும் மு.க.ஸ்டாலின், விஜய் ஆகியோர் வேட்புமனு செய்தனர். வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லூரியில் உள்ள பெரம்பூர் தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு செய்தார்.
வேட்புமனு தாக்கலின் போது அவர், சொத்துகள் குறித்த விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது பெயரில் ரூ.3.30 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.4.34 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
அதில், தனது பெயரில் ரூ.3.30 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளும், தனது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.1.32 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னிடம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ஏதுமில்லை என்றும், தனது மனைவி துர்கா ஸ்டாலினிடம் 720 கிராம் (90 சவரன்- மதிப்பு ரூ.84 லட்சம்) பழைய நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் ரொக்கப் பணம் ரூ.10,000, தனது மனைவி துர்கா ஸ்டாலினிடம் ரூ.40,000 கையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.தன்னிடமும், தனது மனைவியிடமும் சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை என்றும், இருவரும் அஞ்சலக சேமிப்பு, தேசிய சேமிப்பு, ஈட்டுறுதி சேமிப்பு என இவை எவற்றிலும் முதலீடு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அசையா சொத்து விவரங்களை பொறுத்தவரை, ரூ.4.34 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாகவும், தனது மனைவி தூர்கா ஸ்டாலின் பெயரில் ரூ.2.11 கோடி அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தனது பெயரில் தஞ்சை மாவட்டம், அகரத்திருநல்லூர் கிராமத்தில் வேளாண் நிலம் இருப்பதாகவும், தனது மனைவி பெயரில் வேளாண் நிலம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். தன் பெயரில், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியிலும், துர்கா ஸ்டாலின் பெயரில், திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் மற்றும் நாகப்பட்டினத்தில் வேளாண்மை அல்லாத பிற நிலங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தானும், தனது மனைவியும் செலுத்த வேண்டிய வங்கிக் கடன் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை எதுவும் இல்லை என்றும், வருமான வரி, ஜி.எஸ்.டி., சொத்து வரி எதுவும் நிலுவையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்ட வருமானமாக 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.27.34 லட்சமும், 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.20.93 லட்சமும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.60.40 லட்சமும், 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.30.59 லட்சமும் 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.30.94 லட்சமும் காட்டப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் :
தவெக தலைவர் விஜய்-க்கு ரூ. 404.58 கோடி அளவுக்கு அசையும் சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020-21 நிதியாண்டில் ரூ. 8.4 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ. 237.46 கோடியும், 2022-23 நிதியாண்டில் ரூ. 198.71 கோடியும், 2023-24 நிதியாண்டில் ரூ. 105.69 கோடியும், 2024-25 நிதியாண்டில் ரூ. 184.53 கோடியும் வருமானம் ஈட்டியிருப்பதாக வருமான வரிக்கணக்கில் கணக்கு காட்டியிருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.
அதே போல் மனைவி சங்கீதா பெயரில் சுமார் 15.51 கோடி ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன. அவருக்கு 2020-21 நிதியாண்டில் 6.13 லட்ச ரூபாய் வருமானம் காட்டப்பட்டுள்ளது.
மேலும், கையில் ரொக்கமாக ரூ. 2 லட்சமும், மனைவி கையில் ரொக்கமாக ரூ. 1 லட்சம் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, 4 விலை உயர்ந்த சொகுசு கார்களும், ஒரு விலை குறைந்த காரும் தன்னிடத்தில் இருப்பதாக விஜய் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
அது தவிர, ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் டூ-வீலர் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ரூ. 15 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களும், ரூ. 1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்க நகைகளும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இதே போல், விஜய் மனைவியிடம் 4.7 கோடி ரூபாய் மதிப்பிலான 3,132 கிராம் தங்க நகைகளும், 1 கோடி மதிப்பிலான வைர நகைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்யிடம் 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதும் தற்போது வெளியாகியிருக்கும் பிரமாணப் பத்திரம் வாயிலாக தெரிய வந்துள்ளது.
இத்துடன், தன் மீது எந்தவிதமான குற்றவியில் வழக்குகளும் இல்லை என்றும், அரசுக்கோ, வங்கி - நிதி நிறுவனங்களுக்கோ தான் எந்தவிதமான கடனும் செலுத்த வேண்டியது இல்லை என்றும் தவெக தலைவர் விஜய் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய்யிடம் கடன் வாங்கியவர்கள்
எனினும், விஜய் பல்வேறு தனிநபர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கணிசமான தொகையை கடனாக வழங்கியிருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு 3 கோடி ரூபாயும், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு 3.02 கோடி ரூபாயும், தாயார் ஷோபா சந்திரசேகருக்கு 8.71 லட்சம் ரூபாயும் கடனாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஏ.எல்.பி. அந்தோணியஸ் பிரிட்டோ மற்றும் கோகிலாம்பாள் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றுக்கு தலா 20 கோடி ரூபாயும், வித்யா கல்வி அறக்கட்டளைக்கு 5.84 கோடி ரூபாயும் விஜய் கடனாக வழங்கியுள்ளார்.
இது தவிர, மனைவி சங்கீதாவுக்கு 12.60 கோடி ரூபாயும், மகன் ஜேசன் சஞ்சய்க்கு 8.78 லட்சம் ரூபாயும், மகள் திவ்யா சாஷாவுக்கு 4.60 லட்சம் ரூபாயும் கடனாக வழங்கியுள்ளதாக, வேட்புமனுவுடன் சேர்ந்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.