3ம் கட்டமாக இன்று தவெக கல்வி விருது வழங்கும் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் மூன்றாம் கட்ட விழா இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல்முறையாக இந்த விருது வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இரண்டாவது முறையாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக கடந்த 30 ஆம் தேதி 88 தொகுதிகளைச் சேர்ந்த 676 மாணவ மாணவியர்களுக்கு கல்வி விருது வழங்கப்பட்டது. அப்போது தவெக தலைவர் விஜய், மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழுடன் 5000 ரூபாய்க்கான காசோலையினை வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், பன்னிரண்டாம் வகுப்பில் தமிழக அளவில் 599 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஓவியா அஞ்சலி மற்றும் பத்தாம் வகுப்பில் 499 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சோபியா ஆகியோருக்கு வைர கம்மல் பரிசளித்திருந்தார்.
தொடர்ந்து கடந்த ஜூன் 4ம் தேதி இரண்டாம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு கல்வி விருது விழாவில், மூன்றாம் கட்டமாக இன்று ( 13ஆம் தேதி) மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில் இவ்விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.