திருச்செந்தூரில் விஜய் : விடிய விடிய நடந்த 'சத்ரு சம்ஹார யாகத்தில்' பங்கேற்பு..!!
Apr 28, 2026, 09:31 IST
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் இன்று (ஏப்ரல் 28) அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தந்தார். பின்னர் கோயிலில் உள்ள குகை சன்னதியில், சத்ரு சம்ஹார யாகம் செய்தார். சத்ரு சம்ஹார யாகம் நடத்தினால் எதிரிகள் வீழ்வர் என்பது ஐதீகம்.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய் இந்த விசேஷ யாகம் நடத்தியுள்ளார்.
இந்த யாகத்தை முடித்த பின்னர், மூலவர், சுப்பிரமணியர் சன்னதி முன்பு தரையில் அமர்ந்து விஜய் வழிபட்டார். தொடர்ந்து, சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சிணாமூர்த்தி, பெருமாள், சூரசம்ஹார மூர்த்தி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் விஜய் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, இன்று (ஏப்ரல் 28) அதிகாலை 1 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வந்த விஜய், பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலைச் சென்றடைந்தார். பட்டு வேட்டி - சட்டையில் வந்த விஜய்க்கு அவரது ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திரிபுரசுந்தரிகள் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கையில் வேலுடன் முருகப்பெருமானை தரிசிக்க சென்றார். விஜய்யின் வருகையை முன்னிட்டு, கோயில் பிரகாரம் முன்பு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.