உச்சநீதிமன்றம் சென்றது விஜய் "பதவியேற்பு விவகாரம்"
த.வெ.க தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் எழிலரசி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியாகின. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில், அவரிடத்தில் பெரும்பான்மைக்கான அந்த மேஜிக் நம்பர் 118 சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத பட்சத்தில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கூட்டணியில், இணைந்தாலும் காங்கிரஸ் கட்சியுடன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகள் விஜய்க்கு ஆதரவு அளித்ததை தொடர்ந்து தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்க கோரி தமிழக பொறுப்பு ஆளுநருக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவெக-வை சேர்ந்த வழக்கறிஞர் எழிலரசி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.