×

வேலூரில் பிப்.8 தேதி விஜய் மக்கள் சந்திப்புக் கூட்டம்- பிரமாண்டமாக தயாராகும் முன்னேற்பாடுகள்

 

வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வேலூர் அருகே 25 ஏக்கரில் இடம் உறுதியான நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியது.

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதே அனைத்துக் கட்சியினரும் தங்களது பிரச்சார வியூகத்தை அமைத்து களத்தில் குதித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு ஊர்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார். கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி கரூரில் நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதன் பிறகு கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் இருந்த அவர். கடந்த வருடம் டிசம்பர் 11ம் தேதி புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். 

கரூர் சம்பவத்துக்கு பின் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 18ம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 2வது முறையாக வேலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, கூட்டத்தை நடத்த வேலூர் மாவட்டத்தில் இறைவன்காடு, கந்தனேரி உட்பட பல்வேறு இடங்களை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்து வந்தார். இந்நிலையில், பள்ளிகொண்டா அடுத்த சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஒடுகத்தூர் செல்லும் சாலையில் சுமார் எட்டு பேருக்கு சொந்தமான  25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தினை தவெக கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த இடத்தில் கூட்டத்தை நடத்த மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பிப்ரவரி 10, 11 ஆகிய தேதிகளில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. 


இதனிடையே போலீசார் தரப்பில் பிப்ரவரி 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மேலே குறிப்பிட்ட இடத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த கூறியதாக தெரிகின்றது. இந்நிலையில், அதிகாரப்பூர்வ தேதி உறுதியாகத நிலையில், பள்ளிகொண்டா அடுத்த அகரம்சேரி-ஒடுகத்தூர் சாலையில் வேலூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தினை   8 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மைதானம் சமன்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளனர். மேலும், இந்த மக்கள் சந்திப்பு நடைபெறும் 25 ஏக்கர் நிலத்தினை அதே பகுதியை சேர்ந்த 8 விவசாயிகளிடம் அதற்கான வாடகை தொகை கொடுத்து தேர்வு செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். மேலும் மக்கள் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஐந்து இடங்களை தேர்வு செய்து அந்த இடத்தையும் சுத்தம் செய்து வருகின்றனர்.