புதுச்சேரியில் வரும் 9ம் தேதி விஜய் பொதுக்கூட்டம்- அனுமதி கோரி மனு
புதுச்சேரியில் ரோடு ஷோவுக்கு மறுத்த நிலையில், வரும் 9ல் விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி எஸ்எஸ்பியிடம் தவெகவினர் இன்று மனு தந்துள்ளனர்.
புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மூலம் மக்களை சந்திக்க அனுமதி கோரி தவெகவினர் டிஜிபி அலுவலகத்தில் கடந்த வாரம் மனு தந்தனர். ஆனால் காவல்துறை ரோடு ஷோவுக்கு அனுமதி தரவில்லை. இதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், முதல்வர் ரங்கசாமியை அவரது வீடு மற்றும் சட்டப்பேரவை அலுவலகத்தில் ஐந்து முறை வரை பல நாட்களாக தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் தொடர்ந்து சந்தித்தார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் எஸ்எஸ்பி கலைவாணனிடம் தவெகவினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கோரி கடிதம் தந்தனர். அதில் வரும் டிசம்பர் 9ம் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மாலை உப்பளம் மைதானத்துக்கு டிஜஜி சத்தியசுந்தரம், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோர் உப்பளம் மைதானத்துக்கு வந்தனர். அப்போது தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெகவினரும் வந்தனர். மைதானத்தில் மேடை அமைவது உள்ளிட்ட அனைத்து பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். வரைப்படம் வைத்து பேசினர். அதைத்தொடர்ந்து டிஜஜி சத்தியசுந்தரம் கூறுகையில், பொதுக்கூட்டம் நடத்த தவெக மனு தந்தனர். அதையடுத்து ஆய்வு செய்தோம். இங்கு மழைநீர் தேங்கியுள்ளது. அத்துடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை சூழல் உள்ளது. அதை கருத்தில் சொல்லியுள்ளோம். அதையடுத்து அவர்கள் தெரிவிப்பார்கள். ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.