அரசியலில் திருப்பம் : பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க விஜய் திட்டம்..!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் தேர்தலில் அந்தக் கட்சியுடன் எந்தக் கட்சி கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.விஜய் தலைமையில் ஒரு மெகா கூட்டணி உருவாகும் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்தனர்.அதிமுக - பாஜக உடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. பாஜகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த தேமுதிக ஆகிய கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைத்து வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.
முதல் முறையாக தேர்தல் களத்தைச் சந்திக்கும் விஜய் முன்பு, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் எனப் பேசப்பட்டது. ஆனால், அக்கட்சி தற்போது பாஜகவுடன் இணைந்துள்ள நிலையில், புதிய கூட்டணியை விஜய் அமைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் தனித்துக் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், அதுமட்டுமின்றி வேறு சில சிறிய கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தற்போது இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறது; அன்புமணி ராமதாஸ் அதிமுகவுக்கும், ராமதாஸ் திமுகவுக்கும் ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், பாமகவின் ஒரு அணியாவது தவெகவில் சேர்ந்தால் மட்டுமே இபிஎஸ்-ஐ தோற்கடிக்க முடியும் என்று விஜய்க்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன் விளைவாக, தற்போது அதிமுக பக்கம் இருக்கும் அன்புமணியை தவெகவில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு அன்புமணி ஆதரவு தெரிவித்து வருவதால், அவர் சுலபமாகத் தவெகவில் சேர்ந்துவிடுவார் என்று விஜய் கருதுவதாகத் தெரிகிறது. இதன் அடுத்த கட்டமாக, தவெகவின் அரசியல் எதிரியான திமுகவுடன் ராமதாஸ் இணைவதைத் தடுக்க, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தவெக திட்டமிட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.