×

வேலூரில் 'ரோடு-ஷோ' நடத்த விஜய் திட்டம்..!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அதில் சுமார் 69 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கோயம்புத்தூரில் முதல்கட்ட பூத் கமிட்டி மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. 13 மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தலைவர் விஜய், உரையாற்றி, எதிர்காலப் பணிகள் குறித்து வழிகாட்டினார்.திறந்த வேனில் பொதுமக்களை நோக்கி கையசைத்தபடி வந்த விஜய் பொதுமக்களின் வரவேற்பை கண்டு திக்கு முக்காடினார்.

மாநாட்டில் பேசிய விஜய் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இது ஓட்டுக்காக மட்டுமே நடக்கும் மாநாடு இல்லை. நாம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காகத்தான் மக்களோடு மக்களாக எப்படி ஒன்றிணைய போகிறோம் என்பதற்காகதான் இந்த பயிற்சி பட்டறை என அதிரடியாகவும், ஆக்ரோஷமாகவும் பேசி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினார்.

விஜய் பேச்சு மற்றும் அவரை காண திரண்ட கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து த.வெ.க. பூத் கமிட்டி 2-ம் கட்ட மாநாட்டை உடனே நடத்துவது பற்றி கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துடன் ஆலோசனை நடத்தி வந்தார். மாநாட்டுக்காக மதுரை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வந்தது.மாநாடு நடக்கும் இடமாக வேலூர் தேர்வாகியுள்ளது.

மாநாடு நடைபெறும் இடத்தை புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இந்த மாநாட்டில், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்த பூத் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் தலைவர் விஜய் உரையாற்ற உள்ளதுடன், ரோடு-ஷோ நடத்தும் வாய்ப்பும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநாட்டின் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்.