×

தனி வழியில் விஜய், தனி ஒருவனாக சீமான்... நான்கு முனைப் போட்டியில் எந்த கூட்டணிக்கு சவால்?

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இரு அணிக் கட்டமைப்பைத் தாண்டி, தெளிவான நான்கு முனைப் போட்டியாக மாறியுள்ளது. தி.மு.க. – அ.தி.மு.க. தலைமையிலான பாரம்பரிய கூட்டணிகள் மையமாக இருந்தாலும், விஜய் தொடங்கிய த.வெ.க. புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, ஒரு தசாப்த வளர்ச்சிக்குப் பிறகு மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. திராவிட அரசியல் கட்சிகள், வலுவான கூட்டணிகளை உருவாக்க பல்வேறு சமரசங்களை மேற்கொண்டுள்ளன. இதுநாள் வரை வலுவான கூட்டணி என கருதப்பட்ட தி.மு.க. கூட்டணியில், தலைவர்களின் அதிருப்தி குரல் வெளிப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம், பலமில்லாத அணி என்று விமர்சிக்கப்பட்ட அ.தி.மு.க. கூட்டணியில், ஒற்றுமையும் மகிழ்ச்சியும் வெளிப்படுகிறது.

தி.மு.க. அணி: முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” தற்போது 13 கட்சிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த கூட்டணியில், தே.மு.தி.க. புதியதாக இணைக்கப்பட்டுள்ளது; மக்கள் நீதி மய்யம் ஆதரவு மட்டும் தெரிவித்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். வாக்கு சிதறலைத் தவிர்க்க, ஸ்டாலின் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமரசங்களை செய்துள்ளார். தே.மு.தி.க.க்கு ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், கூடுதல் இடப்பங்கீட்டு கோரிக்கைகள் எழுந்தன; கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க. அதிக தொகுதிகள் கேட்டன. ஆனால், எதிர்பார்த்த அளவில் அவை நிறைவேறவில்லை. இரட்டை இலக்கம் எதிர்பார்த்த திருமாவளவனுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைத்தது. தி.மு.க. கூட்டணியில் சலசலப்புக்கு முக்கிய காரணம், தே.மு.தி.க.க்கு வழங்கப்பட்ட 10 தொகுதிகள் என்பதே. அந்த கட்சியின் வாக்கு வலிமை ஒரு சதவீதத்திற்கும் கீழ் என்பதால், இது குறித்து கூட்டணிக்குள் கேள்விகள் எழுகின்றன. தி.மு.க. இந்தத் தேர்தலை “தமிழ்நாடு எதிர் டெல்லி” மோதலாக சித்தரிக்கிறது. நலத்திட்டங்கள், நேரடி பண பரிமாற்றம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, “திராவிட மாடல் 2.0” அரசை ஸ்டாலின் முன்வைக்கிறார். 1977க்குப் பிறகு தொடர்ந்து இரு தேர்தல்களில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளாத வரலாற்றை மாற்றவும் முயற்சி செய்கிறார்.

அ.தி.மு.க. அணி: அ.தி.மு.க. தரப்பில், அமித் ஷா தலையீட்டின் மூலம், கட்சி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. வலுவான கூட்டணிக்காக, எடப்பாடி பழனிசாமியையும் டி.டி.வி. தினகரனையும் சமரசப்படுத்தி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைக்கப்பட்டது. ஆனால், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வி.கே. சசிகலாவுக்கு இடமளிக்கப்படவில்லை. கே.ஏ. செங்கோட்டையன் நீக்கப்பட்டு, பின்னர் த.வெ.க.வில் இணைந்தார். அன்புமணியின் பா.ம.க.வும் கூட்டணியில் சேர்க்கப்பட்டது. மேலும், பல சிறிய சமூக அடிப்படையிலான கட்சிகளும் இணைந்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க.வோடு சேர்த்து மொத்தம் 10 கட்சிகள் உள்ளன. கூட்டணி விரிவடைந்திருந்தாலும், ஆட்சி அமைப்பு குறித்து குழப்பம் நீடிக்கிறது. பழனிசாமி, அ.தி.மு.க. அரசு என வலியுறுத்துகிறார்; பா.ஜ.க. தரப்பு “டபுள் என்ஜின்” மாடலை முன்வைக்கிறது. இதனால், தமிழ்நாடு எதிர் டெல்லி என்ற விமர்சனத்தையும் அ.தி.மு.க. எதிர்கொள்கிறது. சட்டம்–ஒழுங்கு, ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள் மூலம், தி.மு.க. மீது தாக்குதல் தொடர்கிறது. கூட்டணி பேச்சு, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதி மற்றும் பிரச்சாரத்தில், தி.மு.க.வை விட அ.தி.மு.க. ஒரு அடி முன்னிலையில் உள்ளது. எந்தவித குழப்பமுமின்றி செயல்பட்டுள்ளது. எனினும் பா.ஜ.க.வில் அண்ணாமலைக்கு 'சீட்' தரவில்லை என்ற அதிருப்தி குரல் அவரது ஆதரவாளர்களால் எழுகிறது. இது தேர்தலில் தாக்கம் செலுத்தலாம்.

தனி வழியில் விஜய்: “இரண்டே இரண்டு பேர் இடையில் தான் போட்டி. ஒன்னு தூய சக்தி த.வெ.க., மற்றொன்று தீய சக்தி தி.மு.க.” என்று நடிகர் விஜய் 'பஞ்ச்'ஆக பேசுகிறார். த.வெ.க., இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே ஆதரவை ஈர்த்துள்ளது. நகர்ப்புற மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. இரட்டை இலக்க வாக்கு சதவீதம் பெறும் வாய்ப்பு உள்ளது எனக் கணிக்கப்படுகிறது.  இந்த ஆதரவு, வாக்கு சிதறலை ஏற்படுத்தும் சக்தியாக மாறுமா அல்லது தேர்தல் முடிவை தீர்மானிக்கும் நிலைக்கு உயருமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. ஆனால், திராவிடக் கட்சிகள் போல் வலுவான அமைப்பு தளம் இல்லாதது சவாலாக உள்ளது.

தனி ஒருவன் சீமான்: நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது; இதில் பாதி பெண்கள். தற்போதைய அரசியல் சூழலில், ஆட்சியை விட, கட்சியின் வாக்கு விகிதத்தை உயர்த்துவதோ அல்லது தக்கவைப்பதோ முக்கிய இலக்காக உள்ளது. இதேசமயம், சில சமூக அடிப்படையிலான ராமதாஸ், சசிகலா, கிருஷ்ணசாமி, வேல்முருகன் போன்ற தலைவர்கள் மிகவும் குறுகிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும், பிரதான களம் இன்னும் திராவிட கட்சிகளுக்கே மையமாக உள்ளது. வெற்றி - தோல்வியைத் தாண்டி, திராவிட அரசியலின் அடுத்த கட்ட வடிவமைப்பை தீர்மானிக்கும் முக்கியத் திருப்பமாக அமையக்கூடும்.