×

கொடைக்கானலில் ஜனநாயகன் பட ஷூட்டிங்... விஜய்யை பார்த்த குஷியில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்

 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் படத்தின் பட காட்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் 4 நாட்கள் பயணமாக கொடைக்கானலுக்கு வந்துள்ளார்.


நேற்று கொடைக்கானல் வந்த விஜய் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மேலும் 4 நாட்கள் படபிடிப்பு தளத்தில் விஜய் இருப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதுரை வழியாக கொடைக்கானலுக்கு வந்த விஜய்யை தொண்டர்கள் சூழ்ந்து வந்த நிலையில், இன்றும் கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிகுடி கிராமத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விஜய் தனியார் விடுதிக்கு செல்லக்கூடிய வழியில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் மாலை 6:00 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து தனியார் விடுதிக்கு செல்லும் வழியில் தாண்டிகுடி கிராமத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை விஜய் கையசைத்தவாறு சந்தித்து சென்றார். மேலும் பொதுமக்களுடன் தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால் விஜய்யை காண்பதற்காக சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் பல மணி நேரம் காத்திருந்த பொது மக்களை இரண்டு நிமிடத்தில் சந்தித்து விஜய் தனியார் விடுதிக்கு திரும்பினார்.