விஜய் பாஜகவுக்கு செயல்படுகிறார்.. விசில் அடிப்பவர்களுக்கு வாக்களிக்க கூடாது.. திருமா நெத்தியடி!
திருவொற்றியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல். சுந்தரராஜனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த காலத்தில் இருந்த அதிமுகவின் நிலைமை தற்போது மாறிவிட்டதாகவும், இப்போது அந்தக் கட்சி பாஜகவின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு அளிக்கப்படும் வாக்குகள் பாஜகவுக்கே செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் மாற்று அரசியல் என்ற பெயரில் புதிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார். அதாவது விசிலடித்துக் கொண்டு வருபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்தார். குறிப்பாக சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வரும் நபர்கள் குறித்து பேசும் போது, தமிழகத்தில் அரசியல் போட்டி இடதுசாரி மற்றும் வலதுசாரி சிந்தனைகளுக்கிடையே தான் நிலவுகிறது என்றார். இந்த சூழ்நிலையை முழுமையாக புரிந்து கொள்ளாமல் சிலர் அரசியலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவெக தலைவர் விஜய் குறித்து குறிப்பிட்டு பேசும் போது, அவர் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக பாஜகவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். குறிப்பாக சில சமூக வாக்குகளை பிரித்து, அதிமுகவிற்கு ஆதரவாக மாற்றுவதன் மூலம் பாஜக வெற்றிக்கு உதவி செய்யப்படுகின்றது என்றார். இதே போல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றும் கூறினார்.