×

“விஜய் மட்டுமே முக்கிய பிரமுகர்” காவல்துறை கேள்விகளுக்கு என்.ஆனந்த் பதில் கடிதம்

 

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் யார் யார் முக்கிய பிரமுகர்கள் என்ற காவல்துறையினர் கேள்விக்கு எங்கள் தலைவர் விஜய் மட்டுமே முக்கிய பிரமுகர் வேறு யாரும் இல்லை என கட்சி சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  கூட்டணி பேச்சுவார்த்தை, கட்டியை வலுப்படுத்துவது, வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது,  களத்திற்குச் சென்று மக்களை சந்திப்பது என சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகின்றன.  அந்தவகையில் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கி, 2026  சட்டமன்ற தேர்தலில் களம் காணவுள்ள  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து  தென்மாவட்டங்களை மையப்படுத்தி  மதுரையில் 2வது மாநில மாநாட்டை வரும் 21ஆம் தேதி நடத்த இருக்கிறார்.


மதுரை மாநாட்டுக்கு அனுமதி அளிக்க காவல்துறை சார்பில்  கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜயை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகர்களும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை. விமான நிலையத்தில் இருந்து மாநாடு நடக்கும் வரை அவருக்கு எந்த வரவேற்பும் அளிக்கப்படாது. மாநாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு என்று தனியாக பெண் தன்னார்வலர்கள், முதியவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பகுதியில் வாகன நிறுத்தத்திற்கு சுமார் 400 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் 1.20 லட்சம் ஆண்கள், 25,000 பெண்கள், 4,500 முதியவர்களுக்கு மட்டுமெ அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.