×

தேர்தலில் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக்கோரி விஜய் தரப்பில் மனு தாக்கல்

 

தேர்தலில் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக, முதல்வர் விஜய் தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்தனர். இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது முதல்வர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் ஜி.மாசிலாமணி மற்றும் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், முதல்வருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதால் 4 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.  அதற்குள் நிராகரிக்கக் கோரும் மனுவை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.