☰
×

”விஜய் வருகையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை” - திருப்பூர் காவல்துறை விளக்கம்

 

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையவில்லை. உணவகங்களை மூட திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல் குறித்து திருப்பூர் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று 30.09.2026 தாராபுரத்திற்கு வருகை தருவதையொட்டி, தாராபுரம் பகுதிகளில் கடைகள் மற்றும் உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சில சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வருகையையொட்டி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது பயணங்களை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளும் வகையில், திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான போக்குவரத்து மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. கடைகள் அல்லது உணவகங்களை மூடுவதற்கு திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. பொதுமக்கள் வழக்கம்போல் கடைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வருகின்றனர். எனவே, சமூக வலைதளங்களில் பரவி வரும் கடைகள் அடைப்பு மற்றும் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் இது போன்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என்றும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்த பின்னரே அவற்றை நம்புமாறும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.