×

30 ஆண்டுகால சகாப்தம் நிறைவு: வியட்நாமில் '2G' சேவைகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம்..!

 

வியட்நாமில் கடந்த 1993-ஆம் ஆண்டு 'மொபிஃபோன்' (MobiFone) நிறுவனம் மூலம் முதன்முதலில் 2ஜி ஜிஎஸ்எம் (GSM) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990-களின் தொடக்கத்தில் மொபைல் போன் ஒன்று சுமார் $1,000 டாலருக்கும் (அன்றைய மதிப்பில் மிக அதிக தொகை), ஒரு நிமிட அழைப்புக் கட்டணம் 30 சென்ட் எனவும் மிக விலையுயர்ந்த சொகுசுப் பொருளாக இருந்தது.

அக்காலத்தில் அனலாக் மற்றும் செயற்கைக்கோள் மொபைல் அமைப்புகள் பரிசீலிக்கப்பட்ட போதிலும், வியட்நாம் அரசு தொலைநோக்குப் பார்வையுடன் டிஜிட்டல் ஜிஎஸ்எம் (GSM) தொழில்நுட்பத்தைத் தேர்வு செய்தது. இத்தேர்வு வியட்நாமின் தகவல் தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.

2ஜி சகாப்தத்தின் முடிவு:

கடந்த இரண்டு ஆண்டுகளாக பயனாளர்களைச் சிமார்ட்ஃபோன்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வந்ததால், இந்த 2ஜி சேவை நிறுத்தம் பெரும்பாலான மக்களைப் பாதிக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் முக்கிய எல்லைப் பகுதிகளான டிரூவாங் சா (Truong Sa), ஹோவாங் சா (Hoang Sa) தீவுகள் மற்றும் கடல்சார் தளங்களில் மட்டும் தற்காலிகமாகச் சேவை தொடரும்.

ரூ.1,000 கோடிக்கு ஏலம் போன அலைக்கற்றை:

2ஜி சேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த 900 MHz அலைக்கற்றையை (Spectrum) வியட்நாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சமீபத்தில் ஏலம் விட்டது. இதனை விஎன்டிபி (VNPT), வியட்டெல் (Viettel), வியட்நாம்மொபைல் (Vietnamobile) ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 3 டிரில்லியன் டாங் (சுமார் $114 மில்லியன் டாலர் / ₹1,000 கோடிக்கும் அதிகம்) கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளன. இந்த அலைக்கற்றை இனி 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை விரிவுபடுத்தப் பயன்படுத்தப்படும்.

வியட்நாம் தனது 3ஜி (3G) நெட்வொர்க் சேவைகளையும் வரும் செப்டம்பர் 2028-க்குள் முழுமையாக நிறுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், 5ஜி மற்றும் 6ஜி தொழில்நுட்பங்களில் ஆசிய அளவில் முன்னணி நாடாக உருவெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.