×

கோவையில் வீடியோ எடிட்டர் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம்..!

 

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 33 வயது பெண்ணை, திருமணம் செய்வதாக ஏமாற்றிய அந்தோணி மரிய ராபின் மற்றும் அவரது நண்பர் கிரிஷ் சாமுவேல் குமார் ஆகியோர் மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். பெண்ணின் புகாரைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரிஷ் சாமுவேல் குமாரைக் கைது செய்தனர். தலைமறைவான அந்தோணி மரிய ராபினைத் தேடி வருகின்றனர்

கோவை மாவட்டம் சூலூர் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவர் வீடியோ எடிட்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு கௌதம் என்பவருடன் திருமணமாகி, 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் இப்பெண், சூலூர் கலையரங்கம் பின்புறம் உள்ள அலுவலகம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது எடிட்டிங் வேலையைச் செய்து வருகிறார்.

அங்கு அந்தப் பெண்ணின் பக்கத்து அறையில் தங்கியிருந்த திண்டுக்கல் மாவட்டம் நல்லம நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரன்ஸ் தேவராஜ் என்பவரின் மகன் அந்தோணி மரிய ராபின் (28) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பெண்ணின் குடும்பப் பின்னணியை அறிந்துகொண்ட அந்தோணி மரிய ராபின், அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண், கடந்த ஒரு வருடமாக அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில், அந்தோணி மரிய ராபினுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்ததால், கடந்த சில நாட்களாக இருவரும் பேசாமல் இருந்து வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தோணி மரிய ராபின் தனது நண்பரான திருச்சியைச் சேர்ந்த கிரீஸ் சாமுவேல் குமார் (30) என்பவரை அழைத்துக் கொண்டு, அந்தப் பெண்ணிடம் சமாதானம் பேசுவதற்காக வந்துள்ளார். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத் குடித்து மயக்கமடைந்த பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மயக்கம் தெளிந்து பெண் இதுகுறித்து கேட்டபோது, தாங்கள் பாலியல் உறவு கொண்டதைச் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளதாகக் கூறி இருவரும் மிரட்டியுள்ளனர்.

மேலும், அந்தோணி மரிய ராபினைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தினால் இந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என்றும், காவல் நிலையத்தில் புகார் அளித்தால் மகனுடன் சேர்த்து கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், நேற்று இரவு கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் அந்தோணி மரிய ராபின் மற்றும் கிரிஷ் சாமுவேல் குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதனிடையே, சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கிரிஷ் சாமுவேல் குமாரை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான அந்தோணி மரிய ராபினை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். கோவையில் இது போன்ற தொடர் கூட்டு பலாத்காரம் மற்றும் கொலைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.