10 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் பி.டி.ஆர். நெகிழ்ச்சி
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்டு, 2010-ல் நவீன முனையம் திறக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் ஓடுதள விரிவாக்கத்திற்கான (Runway Expansion) நிலம் கையகப்படுத்தும் பணிகள் பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டன.
தொடர் முயற்சிகளும் நிதி ஒதுக்கீடும்
2016: மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்றது முதல் இதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
2017: சட்டமன்றத்தில் இதற்கான பொருளாதாரத் தேவைகள் குறித்து விரிவாகப் பேசினேன்.
2018: இதன் விளைவாக, 2013 முதல் நிலுவையில் இருந்த நில இழப்பீட்டுத் தொகைக்காக அதிமுக அரசு ரூ. 166.69 கோடி ஒதுக்கீடு செய்தது. இருப்பினும் பணிகள் தொய்வடைந்தே இருந்தன.
2021-ல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தேங்கிக் கிடந்த 615.92 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் அதிகாரிகளுடன் தொடர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, சட்டச் சிக்கல்களைத் தீர்த்து இன்று நிலம் ஒப்படைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு அவர்களைச் சந்தித்து நான் அளித்த கடிதத்தில் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தேன்:
*மதுரையை முழுமையான சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.
*நேரடி விமானச் சேவைகளை எளிதாக்க மதுரையை 'Point of Call' ஆக இணைக்க வேண்டும்.
*24 மணி நேரச் செயல்பாட்டைப் பயன்படுத்தி கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும்.
*விமானப் பாதுகாப்பு அறிவிப்புகளைத் தமிழில் வழங்க வேண்டும்.
"தற்போது கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் என்பது பெயரளவுக்கான செயல்பாடு அல்ல; மாநில அரசு தனது பங்களிப்பை முழுமையாகச் செலுத்தியதோடு, ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாகும்." என அமைச்சர் பி.டி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
இந்த மைல்கல் சாதனையைத் தொடர்ந்து, மதுரை மக்களின் எஞ்சிய கோரிக்கைகளையும் நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.