×

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கே பாராட்டு விழா - எங்கு? எப்போது?

 

ஐபிஎல் என்றால் அனைவருக்கும் சிஎஸ்கேவும் தல தோனியும் தான் நியாபகத்திற்கு வருவார்கள். அந்தளவிற்கு பல லட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள அணி சிஎஸ்கே. கடந்தாண்டு வரை அனைத்து பிளே-ஆப்களிலும் நுழைந்த அணி, மூன்று முறை கோப்பையை வென்ற அணி, Most Successfull ஐபிஎல் அணி என பல்வேறு பெருமைகளைச் சேர்த்து வைத்திருந்தது. ஆனால் அந்த பெருமைகளுக்கெல்லாம் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் கடந்தாண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே படுதோல்வியைச் சந்தித்தது. 

எப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக பிளேஆப் செல்லாமல் வெளியேறியது. அப்போது வர்ணனையாளர்களிடம் பேசிய தோனி, "We will come back stronger, that's is what we known for" (நாங்கள் மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவோம்; நாங்கள் கம்பேக்குக்கு பெயர் போனவர்கள்) என்றார். தோனி சொன்ன அந்த வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை இந்த சீசனில் நிரூபித்துக் காட்டிவிட்டார்; அவரது சகாக்களும் நிரூபித்துவிட்டனர். ரசிகர்களுக்கு கோப்பையையும் பெற்றுக் கொடுத்துவிட்டனர். சிஎஸ்கே 4ஆவது கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. 

அதன்பின் தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கோப்பையை வைத்து பூஜை செய்தனர். அப்போது பேசிய அணியின் உரிமையாளர் சீனிவாசன் சென்னை அணிக்கு விரைவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறும் என்றார். தற்போது அதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் சிஎஸ்கே வெற்றி கொண்டாட்டம் நடைபெறுகிறது. கோப்பையை வென்றபோதே, சிஎஸ்கேவுக்கு பாராட்டு தெரிவித்த ஸ்டாலின், வெற்றியைக் கொண்டாட அன்புடன் காத்திருக்கிறது என்று கூறியிருந்தார்.