தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை, மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொரோனா காலகட்டத்தில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி தங்களது செல்ஃபோன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதுதொடர்பான விசாரணைக்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி காவல்துறையினர் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையின் முடிவில் இருவரின் மீதும் 312/2020 என்ற வழக்கை 188, 269, 294(b), 353, 506(ii) IPC ஆகிய 5 பிரிவுகளின்கீழ் பதிவு செய்தனர். மறுநாள் இருவரையும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் இருவருக்கும் பலத்த காயங்கள் இருந்தபோதிலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால், ஜுன் 23 -ம் தேதி (23.06. 2020) 5 மணி நேர இடைவெளியில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 649/2020, 650/2020 என்ற குற் றவழக்கு, 176 (1)A என்ற பிரிவில் பதிவு செய்யப்பட்டது. காவல் துறை விசாரணையில் தந்தை -மகன் மர்மமான முறையில் இருவரும் உயிரிழந்த விவகாரம் சாத்தான்குளம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வர்த்தக அமைப்பினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த மார்ச் 2-ம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரிடம் நீதிபதி நேரடியாக கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்களிடம் விசாரணை நடைபெற்று முடிவடைந்த நிலையில், தமிழகத்தையே உலுக்கிய தந்தை - மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.