×

அதிமுகவுக்குள் சசிகலாவை கொண்டு வர வேலுமணி தரப்பினர் முயற்சி

 

அதிமுகவில் பல்வேறு அணிகள் உருவாகி, முக்கிய தலைவர்கள் பிரிந்து சென்றுள்ள நிலையில், கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க சசிகலாவின் வருகை உதவும் என அதிருப்தி தரப்பினர் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலா கட்சிக்குள் வந்தால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியை வலுப்படுத்த முடியும் என்பதும் அவர்களின் கணக்கு என கூறப்படுகிறது.

இதற்காக வேலுமணி, சண்முகம் தரப்பைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் சென்னையில் சசிகலாவை சந்தித்து பேசியதாகவும், இதுபோன்ற சந்திப்புகள் பலமுறை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட சில தலைவர்களும் சசிகலாவுடன் பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால், முதலில் அதிமுகவில் பிரிந்து சென்ற அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அதன் பிறகே தனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என்றும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வேலுமணி தரப்பினர் சசிகலாவை சந்திப்பதற்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் அவரை சந்தித்து பேசியதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. வேலுமணி தரப்பின் நகர்வை அறிந்தே இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் சசிகலாவிடம் சமாதான பேச்சு நடத்தப்பட்டதாகவும், எதிர்காலத்தில் அவருக்கு ஆதரவாக இருப்போம் என உறுதியளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், கடந்த காலத்தில் தன்னை எதிர்த்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி சசிகலா அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.