மருத்துவ கண்காணிப்பில் வேலு பிரபாகரன்.. வதந்திகளை பரப்பாதீங்க.. - குடும்பத்தினர் கோரிக்கை..!!
இயக்குநர் வேலு பிரபாகரன் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கிய வேலு பிரபாகரன், அதன் பின்னர் இயக்குநர், நடிகர் என திரையுலகில் பல அவதாரங்களை எடுத்தார். பன்முகக்கலைஞரான இவர், முதன் முதலில் 1989ல் வெளியான ‘நாளைய மனிதன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல ப்டங்களை இயக்கியுள்ளார்.
அதேபோல் நடிகராகவும் காதல் கதை, ஒரு இயக்குநரின் காதல் டைரி, பீட்ஸா 3 , கஜானா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநரான வேலு பிரபாகரன், சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழ்ந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான செய்திகள் அதிகம் பகிரப்பட்டு, பலரும் அவருக்கு இரங்கல் தெரிவிக்க தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் இயக்குநர் வேலு பிரபாகரன் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.