அறிவை வளர்க்க வேண்டிய நூலகத்தில் சர்ச்சைக்குரிய நூல்களா?- வேல்முருகன்
மக்கள் வரிப்பணத்தில் நூல்கள் கொள்முதல் செய்ததில் எழுந்துள்ள புகார்களுக்கு அரசு பதிலளிக்குமா? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விதம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளன. சுமார் 300 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தில் இடம்பெற்றுள்ள நூல்கள் குறித்தே இத்தகைய சர்ச்சைகள் எழுந்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல. ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, குறிப்பிட்ட சில பதிப்பகங்களிலிருந்து அதிக எண்ணிக்கையிலான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வரலாற்று உண்மைகளுக்கும் இலக்கிய ஆதாரங்களுக்கும் முரணாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாலடியார் குறித்த அடிப்படைத் தகவல்கள், மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் பெயர் மற்றும் பாடல் எண்ணிக்கை, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களின் வரலாறு போன்றவற்றில் பிழைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல், பாரதியார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சில கதைகளின் உண்மைத்தன்மை குறித்தும், கீழடி தொடர்பான நூலில் இடம்பெற்றுள்ள படத்தின் ஆதாரம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
இவை அனைத்தும் ஊடகங்களில் வெளிவந்துள்ள தகவல்கள் மற்றும் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள். அவற்றின் உண்மைத்தன்மையை உரிய ஆய்வின் மூலம் அரசு உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதே நூல் தேர்வு மற்றும் கொள்முதல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இருந்ததா என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது. நாலடியார், மதுரைக்காஞ்சி போன்ற தமிழ் இலக்கியங்களின் அடிப்படைத் தகவல்களிலேயே பிழைகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நூல்களைத் தேர்வு செய்தவர்கள் அவற்றை முறையாக ஆய்வு செய்தார்களா? ஆய்வு செய்யாமல் நூல்களை வாங்கியிருந்தால் அதற்குப் பொறுப்பேற்பது யார்? பாரதியார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள கதைகளின் ஆசிரியர் உரிமை குறித்தும், கீழடி தொடர்பான நூலில் இடம்பெற்றுள்ள படத்தின் உண்மைத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இவற்றைச் சரிபார்க்காமல் அரசு நூலகத்தில் இடம்பெற அனுமதித்தது எப்படி? குறிப்பிட்ட பதிப்பகங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நூல்களை எழுதியவர்கள் யார்? தேர்வு செய்யப் பரிந்துரைத்தவர்கள் யார்? கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்? இந்த விவரங்களை அரசு ஏன் முழுமையாகப் பொதுமக்களுக்கு வெளியிடக் கூடாது?
நூல்களின் உள்ளடக்கம், ஆசிரியர்களின் தகுதி, பதிப்பகங்களின் பின்னணி, ISBN விவரங்கள், கொள்முதல் விலை, ஒப்பந்தங்கள், பணம் வழங்கப்பட்ட விவரங்கள் ஆகிய அனைத்தும் வெளிப்படையாக ஆய்வு செய்யப்படுமா? நூல் கொள்முதலில் முறைகேடு அல்லது திட்டமிட்ட விதிமீறல் நடந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால், அதற்குப் பொறுப்பான பதிப்பகங்கள், பரிந்துரையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா? முறைகேடாகச் செலவிடப்பட்ட மக்கள் வரிப்பணம் மீட்கப்படுமா? தமிழ் இலக்கியத்தையும் வரலாற்றையும் பாதுகாக்க வேண்டிய இடத்தில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பது மிகுந்த கவலைக்குரியது. இதனை அரசியல் விவாதமாகக் கடந்து செல்ல முடியாது. இது மக்களின் அறிவையும் வரிப்பணத்தையும் சார்ந்த பொதுப்பொறுப்பு. எனவே, கோவை பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து நூல்களையும் சுயாதீனமான நிபுணர் குழுவின் மூலம் ஆய்வு செய்ய வேண்டும். நூல் தேர்வு முதல் பணம் வழங்கப்பட்டது வரையிலான முழுமையான விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.