விவசாயிகளின் நிலத்தைப் பறிப்பதுதான் சனநாயக ஆட்சியா?- வேல்முருகன்
விவசாயிகளின் நிலத்தைப் பறிப்பதுதான் சனநாயக ஆட்சியா? என்எல்சி நிறுவனத்தின் துரோகங்களுக்குத் துணை போகத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கம் என்ற பெயரில் மீண்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களைப் பறிப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலரை நியமித்திருக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிரானது. ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்கள் எங்கே? அவை அனைத்தும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டனவா? என்கிற கேள்விகளுக்கு இன்று வரை பதில்கள் இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இன்று வரை பயன்பாடின்றிக் கிடக்கின்றன. அவற்றைப் பயன்படுத்த முடியாத என்எல்சி நிர்வாகத்தின் தோல்வியை மறைக்க, மேலும் புதிய நிலங்களைப் பறிக்கத் துடிப்பது எந்த வகையில் நியாயம்? விவசாயியின் நிலத்தைப் பறிப்பதுதான் வளர்ச்சியா? விளைநிலங்களை அழிப்பதுதான் பொருளாதாரக் கொள்கையா?
தேர்தல் நேரத்தில் விவசாயியின் கையைப் பிடித்து வாக்குகள் கேட்டவர்கள், இன்று அதிகாரத்தின் துணைக்கொண்டு விவசாயிகளின் கழுத்தை நெரிப்பது ஏன்? விவசாயிகளைக் காப்போம் என்ற முழக்கம் வெறும் தேர்தல் நாடகமா? ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயியின் நிலத்தைப் பறிப்போம் என்பதுதான் உங்கள் உண்மையானக் கொள்கையா? மாவட்ட வருவாய் அலுவலரை நியமித்திருப்பது நிர்வாக நடவடிக்கை அல்ல. அது விவசாயிகளின் நிலத்தை பறித்தே தீருவோம் என்பதற்கான முன்னறிவிப்பாகவே தெரிகிறது. மேலும், நெய்வேலி மக்களின் நிலம், நீர், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் போராட்டம் இன்று தொடங்கியது அல்ல. கடந்த பல ஆண்டுகளாகபா பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் தொடர்ந்து களத்தில் போராடி, பல கட்ட நில அபகரிப்பு முயற்சிகளைத் தடுத்து நிறுத்தியுள்ளன. மக்களின் எதிர்ப்பையும், போராட்ட வரலாற்றையும் அறிந்திருந்தும், மீண்டும் நில அபகரிப்பிற்காக அதிகாரிகளை நியமிப்பது என்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல. அது மக்கள் போராட்டங்களையே அவமதிக்கும் அதிகாரத் திமிராகும்.
ஒருபுறம் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் நிலம், நிலக்கரி, உழைப்பு ஆகியவற்றின் மீது உருவான, தொடர்ந்து இலாபம் ஈட்டி வரும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கிறது. மறுபுறம் தமிழ்நாடு அரசு, அதே என்.எல்.சி. பெயரால் மேலும் விவசாய நிலங்களை அபகரிக்கத் தயாராகிறது. ஒன்றிய அரசு பொதுத்துறையை விற்கிறது. தமிழ்நாடு அரசு தமிழர்களின் நிலத்தை விற்கத் தயாராகிறது. இரண்டிற்கும் இடையில் சிக்கித் தவிப்பது தமிழ்நாட்டு மக்கள் தான். ஆகையால், பயன்படுத்தப்படாமல் கிடக்கும் அனைத்து நிலங்களின் பட்டியலையும் உடனடியாக வெளியிட வேண்டும். அந்த நிலங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படும் வரை ஒரு அங்குலம் கூட புதிய நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது. மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் நடைபெறும் மக்கள் கருத்து கேட்பு மற்றும் நிலக் கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். நிலம் இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வேலை, வாழ்நாள் வருமானப் பாதுகாப்பு, என்.எல்.சி. இலாபத்தில் பங்கு, தரமான கல்வி, மருத்துவம், குடியிருப்பு உள்ளிட்ட முழுமையான மறுவாழ்வை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்.
உள்ளூர் இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் ஒன்றிய அரசின் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களே! விவசாயியின் வயிற்றில் அடித்துவிட்டு வளர்ச்சி என்று சொல்வீர்களா? விளைநிலங்களை அழித்துவிட்டு சமூக நீதி என்று பேசுவீர்களா? தமிழ்நாட்டின் நிலத்தைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிட்டு, தமிழ்நாட்டு மக்களின் அரசு என்று சொல்ல உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? நிலம் எங்கள் உயிர். நிலம் எங்கள் அடையாளம். அந்த நிலத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. அதைப் பறிக்க நினைக்கும் எந்த அரசாக இருந்தாலும், அந்த அரசுக்கு எதிராக நெய்வேலி மண்ணிலிருந்து, மக்கள் எழுச்சியைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னின்று நடத்தும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.