தேர்தல் விதிமீறல்- வேலூர் திமுக மேயர் சுஜாதா கார் பறிமுதல்
தேர்தல் விதிகளை மீறியதாக, வேலூர் தி.மு.க மேயர் சுஜாதா மீது அதிமுகவினர் புகார் அளித்ததன்பேரில், முதற்கட்டமாக மேயரின் கார் பறிமுதல் செய்யப்பட்டு, அவரின் ஓட்டுநர் மீது போலீஸார் 2 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோயில் பின்புறமாக இருக்கும், மாநகராட்சி வணிக வளாகத்துக்குள் நேற்று இளைஞர்களை அழைத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி தி.மு.க-வைச் சேர்ந்த வேலூர் மேயர் சுஜாதா, மறைமுகமாக விளையாட்டு உபகரணங்களை வழங்க சென்றிருக்கிறார். இந்தத் தகவல் வெளியில் கசிந்தவுடன் பதற்றமான மேயர் சுஜாதா அவசர அவசரமாக `TN 23 DK 9579’ என்ற பதிவெண் கொண்ட தனது டொயோட்டா கிளான்ஸா காரில் ஏறி அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இந்த காட்சியினை அங்குவந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்தக் காட்சியில், காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மேயர் சுஜாதா தனது முகத்தை மறைத்துக்கொண்டு செல்கிறார்.
வணிக வளாகத்தில் இருந்து வெளியே வந்த மேயரின் காரை அங்கு பணியில் இருந்த தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது, கார் கண்ணாடியை இறக்கி `நான் மாநகராட்சி மேயர்’ என்று சுஜாதா அறிமுகப்படுத்தியதும், `உங்கள்மேல் புகார் வந்திருக்கிறது. காரை சோதனையிட்டு விசாரிக்க வேண்டும்’ என்று தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினர் கூறியுள்ளனர் ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மேயர் சுஜாதாவின் ஓட்டுநர் காரை வேகமாக இயக்கிச் சென்றிருக்கிறார். இதுபற்றி, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சுப்புலெட்சுமியிடம் அ.தி.மு.க வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகாராக பதிவு செய்தார்.
அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு புகாரில், ``எங்கள் குழுவினருடன் ஆஞ்சநேயர் கோயில் அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, அடையாளம் தெரியாத ஒருவர் வந்து எங்களிடம் `தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப் பொருள்கள் தருகிறார்கள்’ என்று தகவல் கொடுத்தார். இதையடுத்து, அந்த வழியாக வந்த `TN 23 DK 9579’ பதிவெண் காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றோம். காரில் முன்பக்கம் அமர்ந்திருந்தவர் `நான் மேயர்’ என்று கூறினார். சோதனைக்கு ஒத்துழைக்கச் சொன்னபோது, அவரின் ஓட்டுநர் காரை ஓட்டிச் சென்றுவிட்டார். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து, தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றிருந்த வேளாண் கண்காணிப்பாளர் சதீஷ்வேலன் என்பவர் சத்துவாச்சாரி காவல் நிலையம் சென்று புகாரளித்தார். புகாரின் அடிப்படையில், `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான லஞ்சக் குற்றம்’ மற்றும் `பி.என்.எஸ் 132 - அரசு அலுவலர்களை அவர்களின் அலுவல் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்தல்’ ஆகிய இருப்பிரிவுகளின்கீழ் மேயரின் ஓட்டுநர் மீது போலீஸார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதையடுத்து, இன்று மேயர் சுஜாதாவின் காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.