வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!
உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.. அதன்படி நடப்பாண்டு பேராலய ஆண்டு பெருவிழா இன்று ( 29ம் தேதி) மாலை 6 மணிக்கு கொடியேற்றதுடன் தொடங்குகிறது. தஞ்சை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை கொடியை புனிதம் செய்து வைக்கிறார். தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர்வாதம், தமிழில் திருப்பலி நடைபெற இருக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் , அருட்சகோதரரிகள் பங்குபெறுகிறார்கள்.
தொடர்ந்து திருவிழாவின்போது தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் செப்.8ம் தேதி புனித ஆரோகிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்க இருக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்வும் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் கொடியேற்ற விழாவில் கலந்துகொள்வாதற்க்கு சென்னை, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் நடைபயணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வழியாக வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். பலர் வேளாங்கண்ணி மாதா உருவம் பொறித்த கொடிகளை ஏந்தியும், திருவுருவச்சிலையுடன் கூடிய தேரை இழுத்துக்கொண்டும் செல்கின்றனர். அத்துடன் வேளாங்கண்ணி கடற்கரை சாலை, கடைவீதி, தேவாலய வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.