×

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்..! புழுதிவாக்கத்தில் நிற்கும், ஆதம்பாக்கத்தில் நிற்காது!

 

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை புறநகர் ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பை விரிவாக்கம் செய்யும் ஒரு முக்கிய மைல் கல்லாக பறக்கும் ரயில் சேவைகள் இன்று (மார்ச் 14) முதல் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி- பரங்கிமலை இடையேயான சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரப் பாதையில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த இணைப்புப் பாதையின் மூலம் இனி பரங்கிமலை ரயில் நிலையம் பறக்கும் ரயில் சேவைகளுக்கான முனையமாகச் செயல்படும். இது நகரின் தென்பகுதிகளில் ரயில் இணைப்பை வலுப்படுத்துவதுடன், மற்ற புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளுக்கு பயணிகள் எளிதாக மாறிச் செல்வதற்கு வசதியாக அமையும்.

சென்னை கடற்கரை-பரங்கிமலை இடையே 43 இணைப்பு ரயில்களும், சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே 2 இணைப்பு ரயில்களும், வேளச்சேரி-பரங்கிமலை இடையே 3 இணைப்பு ரயில்களும் இயக்கப்படும்

எனினும், ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் இந்த ரயில்கள் நிற்காது. இந்த ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில்கள் நின்றுச் செல்வதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்ததும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை செல்லும் பறக்கும் ரயில்கள், சென்னை கோட்டை, சென்னை பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், முண்டகக்கண்ணியம்மன் கோவில், திருமயிலை, மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி மற்றும் புழுதிவாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

பரங்கிமலையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பறக்கும் ரயில்கள், புழுதிவாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், கோட்டூர்புரம், கிரீன்வேஸ் சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டகக்கண்ணியம்மன் கோவில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை பூங்கா நகர் மற்றும் சென்னை கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

பரங்கிமலை - வேளச்சேரி ரயில்கள், வேளச்சேரி - பரங்கிமலை ரயில்கள் புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் நிற்கும். இருப்பினும், இந்த ரயில்கள் ஆதம்பாக்கத்தில் நிற்காது; இந்த பறக்கும் ரயில் சேவைகள் சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து மாநகரப் போக்குவரத்தை மேலும் வலுப்படுத்தும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து நாட்களுக்கும் பொருந்தக்கூடிய மாற்றியமைக்கப்பட்ட சென்னை பறக்கும் ரயில் சேவைக்கான (MRTS) கால அட்டவணையையும் தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.