வீரமணி பாலியல் வழக்கு- FIR பதியாமல் இருக்க ரூ.20 கோடி?
பாலியல் வழக்கில் FIR பதியாமல் இருக்க கடந்த அக்டோபர் மாதம் ரூ.20 கோடி வரை வீரமணி தரப்பு அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையை சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த 6.10.2025 அன்று விபசார தடுப்பு பிரிவு போலீசில் ஒரு புகாரை தெரிவித்தார். அதில், "அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என்னுடைய அலுவலகத்துக்கு வந்தார். அவர் 'பென்டிரைவ்' ஒன்றை கொடுத்தார். அதில் பிரபல தொழில் அதிபரான 'ஜெம்ஸ் கிரானைட்ஸ்' உரிமையாளர் வீரமணி (வயது 84) சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட 'வீடியோ' காட்சிகள் இருப்பதாக கூறிச் சென்றார்” என்ற தகவலை தெரிவித்தார். அந்த 'பென்டிரைவ்'வில் இருந்த வீடியோ காட்சியை விபசார தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தொழில் அதிபர் வீரமணி சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ காட்சிகள் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசார் 7.10.2025 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் தொழில் அதிபர் வீரமணி சாந்தி என்ற பெண்ணுக்கு தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சாந்தியும், அவரது கணவர் மகேந்திர சிம்கனும் பல சிறுமிகளை தொழில் அதிபர் வீரமணிக்கு விருந்தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இதில் இந்த வழக்கு தொடர்பான 'வீடியோ' ஆதாரங்கள், சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பல சிறுமிகளை சீரழித்த தொழில் அதிபர் வீரமணியை மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்புப்பிரிவு போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். சிறுமிகளை சப்ளை செய்து வந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாலியல் வழக்கில் FIR பதியாமல் இருக்க கடந்த அக்டோபர் மாதம் ரூ.20 கோடி வரை வீரமணி தரப்பு அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் அப்போது பதவியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. வழக்கை முடித்து வைப்பதாக கூறி ரூ.14 கோடி பணம் பெற்றதாகவும், அப்போதைய ஆளுங்கட்சிக்கு நெருங்கிய நபர் ஒருவர் பணம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.