☰
×

வீரமணி வழக்கில் தொடர்பு? பெண் காவல் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..!!

 

ஜெம் வீரமணி மீது இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இதில், 7 வழக்குகள் போக்சோ வழக்குகள் ஆகும். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழில் அதிபர் 'ஜெம்' வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் டிரைவர்கள் பாபு, பார்த்திபன், லாசர், உதவியாளர் கணேசன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வழக்கு மட்டும் சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்காகும். இந்த புகார்கள் அனைத்தையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. ஒவ்வொரு வழக்கிலும் ஆதாரம் மற்றும் ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு தனித்தனியாக திரட்டி வருகிறது.

இந்த நிலையில், ஜெம் வீரமணி வழக்கை முறையாக விசாரணை நடத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காவல்துறை பெண் அதிகாரிகள் 3 போ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உதவி ஆணையர்கள் கீதாஞ்சலி, வனிதா, துணை ஆணையர் ராஜலட்சுமி ஆகிய மூவரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து உள்துறை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண், மத்திய குற்றப்பிரிவின் முன்னாள் கூடுதல் கமிஷனர் ராதிகா உள்ளிட்ட 7 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் தெரிவித்தனர். ஜெம் வீரமணி மீதான வழக்கை பொறுத்தமட்டில், முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் உள்பட 7 அதிகாரிகள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்து தாக்கல் செய்யப்போகும் குற்றப்பத்திரிகையில் இவர்கள் பெயர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.