×

இன்று அமைச்சர்களாக பதவியேற்கும் விசிக வன்னி அரசு, முஸ்லிம் லீக் ஷாஜஹான்..!

 

தவெக தலைவர் விஜய் அமைச்சரவையில் விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெறுவதாக அறிவித்துள்ளன. விசிகவின் வன்னி அரசு, முஸ்லிம் லீக்கின் ஷாஜஹான் ஆகியோர் அமைச்சர்களாகின்றனர். சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் வன்னி அரசு மற்றும் ஷாஜஹானுக்கு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதன் மூலம் முதல்முறையாக தமிழக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக அதிகாரம் பெறவிருக்கிறது.

சென்னை வேளச்சேரியில் உள்ள இல்லத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,"விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்று வெளிப்படையான அழைப்பை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற வெளிப்படையான அழைப்பையடுத்து, எனது கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களோடு ஆலோசனை செய்தோம்.

அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது எங்கள் கட்சியின் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. பெரும்பான்மையினர் கூறிய கருத்துகளின் அடிப்படையில் அமைச்சரவையில் கலந்துக் கொள்வதாக முடிவு எடுத்துள்ளோம். அமைச்சரவையில் திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசுவின் பெயரை பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளோம். மே 08- ஆம் தேதி இரவு 06.00 மணிக்கு நாங்கள் நடத்திய இணைய வழி உயர்மட்ட கூட்டத்திலும், 32 பேர் பங்கேற்றத்தில் ஒரு சிலரை தவிர அத்தனை பேரும் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர்.

தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுகிறோம் என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. அதையொட்டி தான் மே 09- ஆம் தேதி முற்பகல் பொதுச்செயலாளர்கள் உடன் நான் உயர்நிலைக் குழுவின் முடிவை முன்வைத்து கலந்தாய்வு செய்தேன். அதன் நிறைவாக நாங்கள் வெளியில் இருந்து ஆதரவளிப்பது என்ற முடிவை எடுத்தோம். நிபந்தனையற்ற ஆதரவை நல்குவது என முடிவெடுத்தோம். அதன் அடிப்படையில் தான் ஆதரவு கடிதத்தை வழங்கினோம்.

செய்தியாளர்களிடையே பேசுகிறபோது வெளியிலிருந்து ஆதரவு நல்குவது என்பதை கூறினோம். ஆனாலும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தனர் என்றாலும் கூட, நாங்கள் அதை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் இருந்து வெளிப்படையான அழைப்பு வந்தது. அந்த அழைப்பையொட்டி கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவதை பரிசீலிக்க வேண்டும்; கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதை கொண்டு வந்த முதல் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தான்.

1991- ஆம் ஆண்டு மூப்பனாரோடு நாங்கள் முன்வைத்த முழக்கம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கூட்டணி ஆட்சி முறை என்பது அறிமுகம் ஆகியிருக்கிறது. எனவே தமிழக வெற்றிக் கழகம் விடுத்த அழைப்பையும் கனத்தில் கொண்டு, கட்சியின் நீண்ட கால கனவையும் கருத்தில் கொண்டு, இந்த முடிவை எடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை பெரும்பான்மையான பொறுப்பாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள். ஆகவே இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

திமுக கூட்டணியில் எங்களின் நிலைப்பாடு குறித்து இன்று அல்லது நாளை அறிவிக்கின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.