×

“என்னவெல்லாம் செய்ய நினைத்தோமோ அதையெல்லாம் செய்வோம்”- வன்னி அரசு

 

தமிழ்நாடு அமைச்சரவையில் சமூகநீதித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உடன் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சென்னை, அடையாரில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு வருகை தந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைப்பாய் திரண்டோம்... அங்கீகாரம் பெற்றோம்... அதிகாரம் வென்றோம் என்கிற முழக்கத்தை விடுதல சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூற தொண்டர்கள் முழக்கமிட்டனர். 

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, “நீண்ட கால இலக்கு இன்று நிறைவேறி இருக்கிறது, அமைப்பாய்த் திரள்வோம் அங்கீகாரம் பெறுவோம் அதிகாரம் வெல்வோம் என்கிற முழக்கத்தின் அடிப்படையில் இயங்கி வருகிறோம். நிச்சயமாக எங்கள் தலைவரின் கனவை நிறைவேற்றுவோம். நாங்கள் எதையுமே தனிப்பட்ட நபரின் அடிப்படையில் பேசுவதில்லை, அவர்களின் செயலின் அடிப்படையில் மட்டுமே கருத்துக்களை கூறி வருகிறோம். என்னுடைய செயல்பாடு என்பது இந்த அரசுக்கு பக்கபலமாகவே தான் இருக்கும். ஆ.ராசா அவர்களுடைய கருத்து என்பது பெண்களை அவமதிப்பதாக இருக்கிறது. பெரியார் மற்றும் அம்பேத்கர் கொள்கையை ஏற்றுக் கொண்ட ஒருவர் இவ்வாறு பேசுவது கொள்கைக்கு எதிராக இருக்கிறது. 


நான் இன்று தான் பதவியேற்று இருக்கிறேன், இனிமேல் தான் வேலைத்திட்டங்கள் செயல்பாடுகள் என அனைத்தையும் செய்ய வேண்டி இருக்கிறது. நீங்களே பாராட்டுக்கூடிய அளவிற்கு என்னுடைய செயல்பாடுகள் இருக்கும். மரியாதைக்குரிய தம்பி ரமேஷ் எப்படி செயல்படுகிறார் என்பதை அவர் என்ன கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறார், திட்டங்களை வகுக்கிறார் என்பதை பொறுத்துதான் நாம் பார்க்க வேண்டும். அவருடைய செயல்பாடும் சமூகநீதி அடிப்படையில் தான் இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியானது அமைந்திருக்கிறது, இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்று, இது அடுத்தடுத்த காலகட்டங்களில் கட்டாயமாக இருக்கும். குறிப்பாக அனைத்து ஆட்சிக்கும் முன்னுதாரணமாக இருக்கும். நாங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறோமா அவையெல்லாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைத்தையும் செயல்படுத்துவோம்” என்றார்.