நவ. 26 வரை கட்சியின் கொடிகளை அரை கம்பத்தி பறக்கவிடுக- திருமாவளவன்
நவம்பர் 26 வரை துக்கம் கடைபிடிக்கும் வகையில் கட்சியின் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (19.11.2026) காலமான கட்சியின் தலைமையகப் பொறுப்பாளர் தம்பி பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அவர்களது உடல் அடக்கம் இன்று (20.11.2026) அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், எரவாஞ்சேரி - விளாகம் கிராமத்தில் நடைபெறுகிறது. அந்த நல்லடக்க நிகழ்வில் இயக்கத் தோழர்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் தவறாமல் பங்கேற்று அஞ்சலி செலுத்திட வேண்டுகிறேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகப் பொறுப்பாளராகக் கடந்த கால் நூற்றாண்டாகக் களமாடிய தம்பி பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அவர்களின் மறைவையொட்டி 26.11.2016 வரை கட்சியின் சார்பில் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், நவ-24 அன்று நடத்துவதென தீர்மானிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் உட்பட கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, கட்சியின் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென அறிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாதென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, நவ- 24 அன்று தொகுதி மாவட்டங்கள் வாரியாக நடத்துவது என மாவட்டச் செயலாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் (18-11-2026) நிறைவேற்றப்பட்டது. ஆனால், துக்கம் கடைபிடிக்கப்படும் தற்போதைய சூழலில் அந்த ஆர்ப்பாட்டத்தை 28 -11-2026 அன்றைக்கு நடத்திட வேண்டுமென அறிவிக்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.