×

“பணியமாட்டோம் என்ற கர்வத்தோடு இருந்தவர்கள் பணிந்துவிட்டார்கள்... இது ஒரு புதிய வரலாறு”- திருமாவளவன்

 

காங்கிரஸ் மூலமாகத்தான் பா.ஜ.க.வுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றில்லை. CJP மூலமாகவும் வழங்க முடியும் என்பதை மக்கள் உறுதிப் படுத்தியுள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.


சென்னையில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அரசியலில் நாம் தீர்மானித்த எதிரிகள்தான் நமக்கு தோல்வியைத் தருவார்கள் என்றில்லை. நம்மால் தீர்மானிக்க முடியாதவர்களாலும் நாம் தோல்வியை சந்திக்க நேரிடும். இதுதான் காலம் நமக்கு சொல்கிற படிப்பினை. திமுகவை அதிமுகதான் வீழ்த்தும், அதிமுகவை திமுகதான் வீழ்த்தும் என்று மரபுவழி சிந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையில் இரண்டு பேரையும் இன்னொரு கட்சி வந்து வீழ்த்தும் என்று தமிழ்நாட்டு தேர்தல் முடிவு தீர்ப்பளித்திருக்கிறது. காங்கிரஸ் பாஜகவை பலவீனப்படுத்தும் அளவிற்கு வலிமை பெற்றிருக்கவில்லை என்ற இறுமாப்போடு இருந்த பாஜகவினருக்கு  ‘நீ பிஜேபி என்றால் நான் சிஜேபி' என்று ஒரு புதிய இயக்கம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தயவால் உருவாகியுள்ளது. யாராலும் வளைக்க முடியாது என்ற இறுமாப்போடு இருந்தவர்கள் வளைக்கப்பட்டு விட்டார்கள். பணியமாட்டோம் என்ற கர்வத்தோடு இருந்தவர்கள் பணிந்துவிட்டார்கள். இது ஒரு புதிய வரலாறு. தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பா.ஜ.க. ‘எங்களுக்கு எதிரியே இந்தியாவில் இல்லை' என்ற இறுமாப்போடு இருந்தது. ஆனால், இன்றைக்கு அது பணிந்து சரணடையும் நிலை ஏற்பட்டுள்ளது. காலம் அத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.


நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தால் டெல்லியே ரத்தக்களறியானது. டெல்லியோடு இந்த போராட்டம் நின்று விடவில்லை.. இந்தியா முழுவதும் தொடர்ந்தது. மத்திய அமைச்சரின் ராஜினாமா மாணவர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. இது பா.ஜ.க வீழ்ச்சிக்கு முதல் படி. எப்படியோ CJP வைத்த கோரிக்கை வெற்றி பெற்றுவிட்டது. காங்கிரஸ் மூலமாகத்தான் பா.ஜ.க.வுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றில்லை. CJP மூலமாகவும் வழங்க முடியும் என்பதை மக்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்” என்றார்.