"சாதி பாகுபாடு சர்வதேசப் பிரச்சினை; ஐநா சபையில் விவாதிக்கப்பட வேண்டும்"- திருமாவளவன்
சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் வொர்க் கல்லூரியில் நடைபெற்ற சமூக படிநிலை முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச சம்மேலனம் நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்று "உலகளாவிய சமூக பாகுபாடுகள் மற்றும் சாதி ஒழிப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது பேசிய திருமாவளவன் , சாதி பாகுபாடு என்பது இந்தியாவிற்குள் மட்டும் சுருங்கிவிடக் கூடிய ஒன்றல்ல , அது ஒரு சர்வதேசப் பிரச்சினை. எனவே, இதனை ஐநா பொதுச் சபை மற்றும் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் விவாதித்து, இதற்கான சர்வதேசத் தீர்வை எட்ட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார்.மனிதர்களுக்கு இடையே இயற்கையாகவே நிறம், உடல் அமைப்பு போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், பிறப்பின் அடிப்படையில் ஒருவரை உயர்ந்தவர் என்றும் மற்றொருவரை தாழ்ந்தவர் என்றும் கருதும் "சமூக ஏற்றத்தாழ்வு" என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பிதம் என்று அவர் விளக்கினார். இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட நிலையில் சிதறிக் கிடக்கும் மக்களை ஒருங்கிணைக்க 'தலித்' என்ற பொதுவான சொல் அவசியமாகிறது. தலித் என்பது ஒரு குறிப்பிட்ட சாதி அல்ல; சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உரிமைகள் மறுக்கப்பட்ட அனைவரையும் குறிக்கும் சொல்லாகும். சமூக நீதி அரசியலில் பெண்களும் கூட தலித்துகளே என்று அவர் குறிப்பிட்டார். சாதியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது தீர்வாகாது. சாதியை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே புரட்சியாளர் அம்பேத்கரின் கனவு. சாதியைத் தாங்கிப் பிடிக்கும் சனாதனக் கோட்பாடுகளை வீழ்த்தாமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை என்று அவர் அழுத்தமாகக் கூறினார். எதிர்காலத் தூண்களான மாணவர்கள் அம்பேத்கரையும், பெரியாரையும், மார்க்ஸையும் ஆழமாகப் படிக்க வேண்டும். சமூகம் குறித்த முற்போக்கான பார்வையை வளர்த்துக் கொண்டு, மனித உரிமைகளைப் பாதுகாக்க தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.