×

“விஜய் வாய் திறக்காதது ஏன்? ஆட்சிக்கு வந்து இரண்டு வாரக் காலம்தான் ஆகிறது... Learning process ஆக இருக்கும்” - திருமாவளவன்

 

இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விசிக பங்கேற்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "ஆட்சிக்கு வந்து இரண்டு வாரக் காலம்தான் ஆகிறது. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் தொடக்கத்தில் ஒரு Learning process என்பது இருக்கும். எடுத்த எடுப்பிலே கருத்து சொல்லி எந்த சிக்கலையும் ஏற்படுத்த வேண்டாம் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வாக கூட மேகதாது அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் என எதிலும் முதல்வர் விஜய் கருத்து தெரிவிக்காமல் இருக்கலாம். இந்தியா கூட்டணி என்னும் மதச்சார்பின்மைக்கான தேசிய அளவிலான கூட்டணி அமைந்ததில் திமுகவின் பங்கு மகத்தானது. அவர்கள் இல்லாமல் இந்தியா கூட்டணி முதல்முறையாக கூடுகிறது என்பது உள்ளபடியே கவலையளிக்கக் கூடிய ஒன்று. அதற்காக வருந்துகிறோம். 

பிரவீன் சக்கரவர்த்தி போட்ட ட்வீட்  விவகாரத்தில் இடதுசாரிகளின் கருத்து சரியே. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு பதிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வழக்கு பதியப்பட்டுள்ளது என்றால் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சொல்ல முடியாது. சமூக நீதி முற்போக்கு கூட்டணி உருவாக்கம் குறித்து இதுவரை பேசவில்லை. இடதுசாரிகள் கருத்தே என் கருத்து. குடியரசு தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக, பெரும்பான்மை கிடைக்காத தவெகவை ஆதரித்தோம்" என்றார்.