திமுக கூட்டணியில் இருந்து விலக விசிக முடிவு- திருமாவளவன் சொன்ன பதில்
சென்னை வேளச்சேரியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டம் நிறைவு பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாரும், திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினருமான வன்னியரசு, விசிகவின் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ரவிகுமார் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என ஆதவ் அர்ஜூனா வெளிப்படையான அழைப்பை முன் வைத்தார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் விசிக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தவெக அமைச்சரவையில் இணைய வேண்டும் என்ற அழைப்பிற்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டோம் அதில் பெரும்பலான கருத்துகளின் அடிப்படையில் விசிக அமைச்சரவையில் இடம் பெறுகிறது என்ற முடிவை எடுத்து உள்ளோம். வன்னியரசு மற்றும் ஜோதி மணி ஆகிய இரு சட்டமன்ற உறுப்பினர்களில் வன்னியரசு அவர்களின் பெயரை பரிந்துரைப்பது என முடிவு எடுத்து உள்ளோம் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் இணைந்து செயல்படுவதாக தெரிவித்திருந்த நிலையில் இப்போது ஆட்சியில் பங்கெடுக்க உள்ளதாக அறிவித்திருக்கிறீர்கள், அடுத்த கட்ட செயல்பாடு தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து இருக்குமா என்ற கேள்விக்கு, இன்று அமைச்சரவையில் இடம்பெறுகிறோம் என்று அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறோம் மற்றவை குறித்த பின்னர் பேசுவோம் என தெரிவித்தார்.
அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது எங்கள் கட்சியின் பெரும்பாலானோர் கருத்தாக இருந்தது. கடந்த 8 ஆம் தேதி நடந்த இணைய வழி கூட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போது ஒரு சில பேரை தவிர பலரும் விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று நினைத்தார்கள். தலைவர் எடுத்த முடிவை ஏற்பதாக முடிவெடுக்கப்பட்டது. நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பது என்ற முடிவெடுத்தோம் அதன் அடிப்படையில் தான் ஆதரவு கடிதத்தை வழங்கினோம் எனவும் செய்தியாளர்களிடையே பேசும்பொழுது வெளியில் இருந்து ஆதரவு என்று உறுதிப்படுத்தினோம் என கூறினார். ஆனாலும் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார்கள். இருந்தாலும் மீள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்த சூழலில் தமிழக வெற்றி கழகம் தரப்பில் இருந்து வெளிப்படையான அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஒட்டி கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவதை அதற்கு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார். கூட்டணி ஆட்சி முறையை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்த இயக்கம் முதல் இயக்கம் விசிக எனவும் 1999 இல் மூப்பனாரோடு தேர்தல் அரசியலில் இருந்தபோது ஆட்சியில் பங்கு அமைச்சரவையில் பங்கு என்றும் முன்மொழிந்தோம். முதன்முதலாக கூட்டணி ஆட்சி முறை என்று அறிமுகமாகிறது. எனவே தமிழக வெற்றிக் கழக விடுத்த அழைப்பை கருத்தில் கொண்டு கட்சியின் நீண்ட கால கனவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை பெரும்பான்மையான பொறுப்பாளர்கள் முன் வைத்திருக்கிறார்கள் என கூறினார். திமுக கூட்டணியில் தொடர்கிறீர்களா இல்லையா என்ற கேள்விக்கு, நாளை அல்லது நாளை மறுநாள் அழைத்து பேசுகிறேன் என்று பதில் அளித்தார்.