"விசிக திமுகவால் சிதைக்கப்படும் அளவிற்கு மோசமான கட்சி இல்லை"- திருமாவளவன்
வி.சி.க.வை தி.மு.க. சிதைக்க பார்ப்பதாக இ.பி.எஸ். குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “விசிக, கம்யூனிஸ்ட், இஸ்லாமிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் இடதுசாரி அரசியலை திமுக பாதுகாப்பதாகவே நான் கருதுகிறேன். மதவாத வெறுப்பு அரசியலிலிருந்து தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்று நினைக்கிற கூட்டணி இது. விசிக-வின் நலன் எவ்வளவு முக்கியமோ கூட்டணியின் நலமும் முக்கியம். 23 கட்சிகள் இடம்பெற்றுள்ள ஒரு மெகா கூட்டணி... விசிகவின் நலன் எவ்வளவு முக்கியமோ.. அதே அளவிற்கு அங்கம் வகிக்கும் கூட்டணியின் நலனும் முக்கியம்.
கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி, கூட்டணியில் உள்ள நல்லவை, கெட்டவைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, விசிக நலன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நலனும் முக்கியம் என இந்த முடிவுக்கு உடன்பட்டிருக்கிறோம். வலதுசாரி பிற்போக்கு அரசியல் வலுப்பெற்றுவிடக் கூடாது, காலூன்றிவிடக் கூடாது, அது தமிழ்நாட்டுக்கும் இந்திய தேசத்துக்கும் நல்லதல்ல. விசிக திமுகவால் சிதைக்கப்படும் அளவிற்கு மோசமான கட்சி இல்லை. திமுக கூட்டணியில் 8 தொகுதிகளிலும் விசிக பானை சின்னத்தில் தான் போட்டியிடும். மற்றவர்களுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவாதத்திற்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. கூட்டணியின் நலனை கருத்தில் கொண்டு கையெழுத்திட்டுள்ளோம்” என்றார்.