×

“விஜய் தேர்தலுக்காகவே கட்சி தொடங்கி, பதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்”- திருமாவளவன்

 

விஜய் அவர்கள் தேர்தலுக்காகவே கட்சி தொடங்கி காத்து இருக்கிறார்கள், பதவிக்காக நகர்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

காட்டுமன்னார்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவில்லை, இந்தியை பேசும் தேசமாக மாற்றுவது அவர்களது இலக்கு. சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க பாஜகவினர் பெரும் நிதி ஒதுக்கி வருவதாகவும், இது ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும். மதவாதம், வெறுப்பு அரசியல், ஹிந்தி–சமஸ்கிருத திணிப்பு ஆகியவற்றுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த கூட்டணிக்காக மாநிலம் முழுவதும் தீவிர களப்பணி மேற்கொள்ளும். 2011 தேர்தலுக்கு பின்னர் சாதி மற்றும் மதவாதக் கட்சிகளுடன் கூட்டணி இருக்காது என அறிவித்தோம் அதில் இன்றும் உறுதியாக உள்ளோம். திமுக கூட்டணியில் எந்தக் கட்சிகள் சேர வேண்டும் என்பதை திமுக தலைமை தீர்மானிக்க வேண்டும். அதில் நாங்கள் அழுத்தம் நெருக்கடி கொடுக்கமாட்டோம்.


மோடி அதிமுக கூட்டணி என மறந்தும் கூட கூறாமல்“தேசிய ஜனநாயக கூட்டணி” என மட்டுமே குறிப்பிடப்படுவது அதிமுகவின் தற்போதைய நிலையை காட்டுகிறது. கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்துவது பாஜகவின் வழக்கம். விஜய் அவர்கள் தேர்தலுக்காகவே கட்சி தொடங்கி காத்து இருக்கிறார்கள், பதவிக்காக நகர்கிறார்கள் . மக்களுக்கு என்ன தொண்டு செய்யப் போகிறோம் என இதுவரை அவர்களுக்கு தெரிவிக்கவில்லை. தொண்டு செய்வதை விட பதவியில் அதிகாரத்தில் தான் அவர்களது அணுகுமுறை உள்ளது. மக்கள் தீர்மானிப்பார்கள். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற நம்பிக்கையில், மகளிருக்கு கூடுதலான தொகையை அறிவித்திருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் வழங்குவதிலேயே பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது , தொடர்ந்து வழங்கிடவும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது” என்றார்.