×

“பாஜகவின் பிடியில் அதிமுக  சென்றுவிட்டது”- திருமாவளவன் 

 

தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் இயங்குகிறது என கூற முடியாத நிலை தான் உள்ளது. சனாதானத்தின் பிடியில் சிக்கி உள்ள அதிமுகவின் நிலையை எண்ணி கவலைப்படுகிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


வி.சி.க தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்தி திணிப்பு இன்றும் தொடர்கிறது. சமஸ்கிருதமயமாதல் தீவிரமாக நடந்து வருகிறது. பன்மை துவத்தை சிதைக்கும் முயற்சியில் பாஜக அரசு குறியாக இருக்கிறது. ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என மோடி அரசு செயல்படுவது நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தாக தான் முடியும். தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் தங்களுடைய மொழியையும் கலாச்சாரத்தையும் காக்க ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருக்கிறது. இரட்டை எஞ்சின் ஆட்சி என பிரதமர் கூறுவது டெல்லியில் ஒரு இன்ஜின் தமிழ்நாட்டில் ஒரு இன்ஜின் எனவா அல்லது தமிழ்நாட்டிலேயே இரட்டை எஞ்சினா என தெரியவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் இயங்குகிறது என கூற முடியாத நிலை தான் உள்ளது. அது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை தான் ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும் என பேசக்கூடிய நிலை இல்லாமல் போய்விட்டது கவலை அளிக்கிறது. அதிமுகவின் நிலையை எண்ணி கவலைப்படுகிறோம். திராவிட இயக்கம் சனாதனத்தின் பிடியில் சிக்கி உள்ளது கவலையளிக்கிறது. பா.ம.க வின் ஒரு அணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டது மற்றொரு அணியை திமுக கூட்டணியில் இணைப்பது குறித்து திமுகவின் தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். பாஜக பாமக அங்கம் வைக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என 14 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்து விவிட்டோம்.

த.வெ.க தலைவர் விஜய் பா.ஜ.க குறித்து என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை யூகித்து கூற முடியவில்லை. அவர் இதுவரை பா.ஜ.க குறித்தோ, பா.ஜ.கவின் செயல்பாடு குறித்தோ விமர்சிக்கவில்லை, விமர்சனம் செய்ய வேண்டிய நேரத்தில் கூட விமர்சிக்காமல் இருக்கிறார். விஜய் இந்த தேர்தலில் தனித்து ஒரு அணியை உருவாக்குவார் அல்லது தனித்து போட்டியிடுவார் என தான் நான் யோகிக்கிறேன். மாநில அரசின் திட்டங்களுக்கு மாநில அரசின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. கல்விக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்கா இருக்கிறார்கள் அது குறித்து கேட்டால் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் ஒதுக்குவோம் என கூறுகிறார்கள். ரயில்வே உள்ளிட்ட ஒன்றிய அரசின் நேரடியான துறைகளுக்கு நிதி ஒதுக்கி விட்டு தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளதாக பிரதமர் பேசுகிறார் இது தமிழ்நாட்டு மக்களை குழப்பம் முயற்சி. தமிழ்நாட்டு மக்களை மோடி அரசு ஓரவஞ்சனையாக நடத்துகிறது என்பதுதான் உண்மை. அதை தமிழக மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.தேர்தலில் போட்டியிட மூன்று இலக்கங்களில் கேட்க முடியாது என்பதால் நாங்கள் இரட்டை இலக்கத்தில் கேட்கிறோம். நாங்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்” என்றார்.