“பிரபலம் அரசியலுக்கு வந்தால் ஈர்ப்பு இருக்கும்! ஓபிஎஸ்க்கு இனி நல்லகாலம்”- திருமாவளவன்
ஒரு நல்ல சினிமா ஹீரோ வந்தாருன்னா கொஞ்ச நாள் அந்த ஈர்ப்பு இருக்கும். ஆனால் தலைமை பண்பு இல்லன்னா அது போயிடும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘மதசார்பின்மை காப்போம்’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “வழக்கமாக தென்னிந்தியாவில் இருந்து குடியரசு துணை தலைவர் தேர்தெடுக்கப்படுவது உண்டு, ஆகவே தமிழ்நாட்டில் இருந்தோ, தென்மாநிலங்களில் இருந்தோ ஒருவர் தேர்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி, இந்திய கூட்டணி சார்பாக ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பது விசிகேவின் கோரிக்கை. ஆணவ கொலைகள் தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ் தலைமையில் மதசார்பின்மைக்கு ஆதரவான அணி இந்தியா முழுவதும் இயங்குகிறது. பாஜக தலைமையில் மதசார்பின்மைக்கு எதிரான அணி இயங்குகிறது. மதசார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரான நகர்வுகளை பாஜக ஒவ்வொரு களத்திலும் முன்னெடுக்கிறது.
ஒரு நல்ல சினிமா ஹீரோ வந்தாருன்னா கொஞ்ச நாள் அந்த ஈர்ப்பு இருக்கும். ஆனால் தலைமை பண்பு இல்லாவிடில் தக்கவைக்க முடியாது. அரசியல் சூழல்களை மாணவர்கள் உற்றுநோக்கி ஆராய வேண்டும். மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை சிந்திக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய ஓபிஎஸ்க்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. திமுக கூட்டணி வலுப்பெறுவது மகிழ்ச்சிதான்” என்றார்.