×

திமுக சார்பிலான மதசார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது- திருமாவளவன்

 

திமுக சார்பிலான மதசார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது. 2026 தேர்தலிலும் இந்த கூட்டணி மக்களின் பேராதரவோடு வெற்றி பெறும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அனைத்திந்திய போர் ஊர்தி தொழிற்சாலைகளின் அம்பேத்கர் தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் அம்பேத்கர் பாதுகாப்பு துறை ஊழியர்கள் சங்கம் இணைந்து அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா மற்றும் பாதுகாப்பு துறையின் நிலை குழு உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா ஆவடியில் நடைபெற்றது இதில் திருமாவளவன் கலந்து கொண்டு தொழிலாளிகளுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது தொழிலாளிகள் சார்பில் திருமாவளவனுக்கு மாலைகள் அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பாஜகவோடு கூட்டணி அமைத்தற்கான காரணத்தை அதிமுவினர் கட்சி தொண்டர்களுக்கு விளக்க வேண்டி உள்ளது. பொது எதிரியை வீழ்த்துவற்காக சேர்ந்து இருக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். அந்த அணியில் இன்னும் யார் யார் சேரப்போகிறார்கள் என்பது உறுதிபட தெரியவில்லை. ஏற்கனவே அந்த அணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க., என்ன நிலை பாட்டை எடுக்க போகிறார்கள் என்பது இன்னும் உறுதி ஆகவில்லை. திமுக சார்பிலான மதசார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளது. 2026 தேர்தலிலும் இந்த கூட்டணி மக்களின் பேராதரவோடு வெற்றி பெறும். ஆவடியில் உள்ள பாதுகாப்பு தொழிற்சாலை, கார்ப்ரேட்டாக மாற்றப்படும் என்று அறிவித்து, தற்காலிகமாக அதை நிறுத்தி வைத்தார்கள். அதன் காலக்கெடு வருகிற டிசம்பரில் முடிகிறது. மேலும் சில ஆண்டுகள் தள்ளி போட வேண்டும். நாங்கள் அரசு ஊழியர்களாக இன்னும் சில காலம் பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளர்கள் தரப்பில் முன் வைத்துள்ளார்கள். இந்திய பாதுகாப்பு துறை இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்ட கூடாது என வி.சி.க., வலியுறுத்துகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என பிரதமரோ, அமைச்சரவையோ குறிப்பாக சொல்லவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என சொல்லியிருக்கிறார்கள். பத்தாண்டுக்கு ஒரு முறை என்று பார்த்த கூட, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ல் நடந்தது. அப்படி பார்த்தால் 2031 ல் தான் நடத்த வேண்டும். 2031 ல் பா.ஜ., ஆட்சியில் இருக்குமா? என்று சந்தேகம் எழுகிறது” என்றார்.