×

”திமுக - விசிகவை பிரிக்க பாஜக திட்டம்”- திருமாவளவன்

 

திமுகவையும், விசிகவையும் பிரிக்க இளவுகாத்த கிளிபோல் பாஜக காத்துக்கொண்டிருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “திமுகவையும், விசிகவையும் பிரிக்க இளவுகாத்த கிளிபோல் பாஜக காத்துக்கொண்டிருக்கிறது. தற்காலிகமாக கூட பாஜக பாமகவுடன் விசிக ஒருபோதும் கூட்டணி வைக்காது. பாஜகவின் ஊழல் ஆட்சியையும், மதவெறி அரசியலையும் பெரும்பான்மை சமூகமான இந்துக்களே தர்போது மரண அடி கொடுத்து வீழ்த்தியுள்ளனர். இந்துக்கள் எல்லாம் தங்களைத்தான் ஆதரிக்கிறார்கள் என்கிற பாஜகவின் பொய்ப் பிரச்சாரத்தை இந்த தேர்தல் முடிவுகள் அம்பலபடுத்தியுள்ளன. கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப்பதன்மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக  முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்றார். 

முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன், இனியாவது அதிமுக விழித்துக்கொள்ள வேண்டும், பாஜக உடனான கூட்டணியை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரிசீலனை செய்ய வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னறிவிப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார். 

அதற்கு பதிலடி கொடுத்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “திமுகவால் எந்த பட்டியல் இன பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியவில்லை. அப்படி இருக்கையில் திருமாவளவன் எதற்கு அங்கு உள்ளார். சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியைவிட்டு பாஜக கூட்டணிக்கு திருமாவளவன் வரவேண்டும். திமுக கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை திருமாவளவன் உணர்ந்துள்ளார்” எனக் கூறினார்.