‘CM 2031’ பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன்!
2026 தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்றது.சட்டசபைத் தேர்தலில் முதன் முறையாக தனித்து தேர்தலில் களம் கண்ட தமிழக வெற்றி கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியானது. ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்கள் இல்லாததால் கூட்டணி கட்சிகளின் தயவை நாடியது. பின்னர், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்தனர். இடையில் அதிமுகவும் திமுகவும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கவும், அதற்கு பிறகு திருமாவளவனை முதல்வராக்கவும் முயற்சிகள் நடந்ததாக வெளியான பேச்சுகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இறுதியில் ஒரு வழியாக முதல்வராக விஜய் பதவியேற்றார்.
அதேநேரத்தில், கூட்டணிக் கட்சிகள் பிரிந்து சென்றதால் தி.மு.க தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. தற்போது ஆட்சியில் அங்கமாக இருந்தாலும், பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் வி.சி.க தலைவர்கள் பலர் விஜய் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் பேசிய திருமாவளவன், "தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்கிறோம்; அடுத்த இலக்கு ஆட்சியைக் கைப்பற்றுவதுதான்" எனப் பேசினார். அதாவது, 2031 சட்டசபைத் தேர்தலில் வி.சி.க ஆட்சியைப் பிடிக்கும் என்ற அவரது கருத்து, அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்த உரையின் தொடர்ச்சியாக, வி.சி.க தொண்டர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர். அதில், திருமாவளவன் காரில் செல்லும் காட்சியும், அந்த காரின் முன்பகுதியில் 'CM 2031' என்று எழுதப்பட்டிருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது. திருமாவளவனின் முதலமைச்சர் கனவை வெளிப்படுத்தும் வகையில் இந்த படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
உண்மை என்ன? - டெஸ்லா காரும் ஏ.ஐ நுட்பமும்!
ஆனால், வி.சி.க-வினர் தீவிரமாகப் பகிர்ந்து வரும் அந்தப் புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலிப் படம் என்பது தெரியவந்துள்ளது.
-
டெஸ்லா கார்: அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள கார் 'டெஸ்லா' (Tesla) நிறுவனத்தின் மின்சாரக் காராகும்.
-
நம்பர் பிளேட் விதிமுறை: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு (EV) பச்சை நிறப் பின்னணியில் தான் எண் பலகை (Number Plate) வழங்கப்படும். ஆனால், அந்தப் படத்தில் வெள்ளைப் பலகையில் 'CM 2031' என அச்சிடப்பட்டுள்ளது.
-
டெலிவரி நிலவரம்: இந்தியாவில் டெஸ்லா கார்களின் முழுமையான விநியோகம் இன்னமும் தீவிரமடையாத நிலையில், இத்தகைய போலிப் படத்தை உண்மை என நம்பி வி.சி.க-வினர் பரப்பி வருகின்றனர்.