திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் சரமாரியாக வெட்டிக்கொலை..!! கணவர் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்..!
திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலரை, அவரது கணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டீபன் ராஜ் - கோமதி தம்பதி. தில் ஸ்டீபன் ராஜ் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில், அவரது மனைவி 26வது வார்டு விசிக கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவர்களுக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளன.
இதனிடையே கடந்த சில மாதங்களாக கோமதிக்கும், வேறு ஒரு நபருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த ஸ்டீபன் ராஜ், இதுபற்றி கோமதியிடம் கேட்டிருக்கிறார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கோமதி , நடுகுத்தகை ஜெயராம் நகர் அருகே அந்த நபருடன் நின்று பேசி கொண்டிருந்துள்ளார். இதனைப்பார்த்த சிலர் ஸ்டீபன்ராஜுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக அந்த இடத்திற்குச் சென்ற ஸ்டீபன் ராஜ், கோமதியிடம் சண்டை போட்டுள்ளார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியபோது, அந்த ஆண் நண்பர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். கடும் ஆத்திரத்தில் இருந்த ஸ்டீபன் ராஜ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோமதியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கோமதிக்கு தலை, முகம், கழுத்து என பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, கையும் துண்டாகியுள்ளது. மேலும், ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர், ஸ்டீபன் ராஜ் தாமாகவே அருகில் இருந்த திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். பின்னர் நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர், கோமதியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஸ்டீபனை கைது செய்த போலீசார், கொலைக்கான குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசிக பெண் கவுசிலரை கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் திருநின்றவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.