டிஎஸ்பி சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் - காவல்துறை அறிக்கை..
பணிக்காலத்தில் டிஎஸ்பி சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை காவல்துறையினர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் அரசு வாகனம் இல்லாமல் நடந்தே அலுவலகம் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் டிஎஸ்பி சுந்தரேசனிடம் இருந்து அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டதாகத் தகவல் வெளியான நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அதற்கு மறுப்பு தெரிவித்தது. மேலும் அவர் அளித்த பேட்டியில், உயர் அதிகாரிகள் டார்ச்சர் கொடுப்பதாகவும், 2024 நவம்பரில் மயிலாடுதுறைக்கு வேலைக்கு வந்த தனக்கு கடந்த மார்ச் மாதம் வரை சம்பளம் கொடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
வி.ஆர்.எஸ் பெற்றுக்கொண்டு சென்றுவிடலாம் என்றிருந்த போது எஸ்.பி. அழைத்து அறிவுரைகளை வழங்கினார். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து என்னை டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறார்கள். நான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என இப்படி செய்கிறார்கள் என்றும் கூறினார். டி.எஸ்பி. சுந்தரேசனின் கருத்துக்கள் ஊடகங்களில் வைரலான நிலையில், தற்போது பணிக்காலத்தில் டிஎஸ்பி சுந்தரேசன் மீது எடுக்கப்பட்ட பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை காவல்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘டி.ஏ.பி சுந்தரேசன் 2005 - 2006 வரை நந்தம்பாக்கத்தில் பணிபுரிந்தபோது வழக்கு ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது ஒருவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதை மறைத்து பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
2008ல் துரைப்பாக்கம் காவல் எல்லையில் முடிவுற்ற வழக்கை சுட்டிக்காட்டி மிரட்டி ரூ.40,000 கையூட்டு வாங்கியதாக சுந்தரேசன் மீது குற்றச்சாட்டு உள்ளது.
துரைப்பாக்கம் காவல் எல்லையில் 2 டாஸ்மாக் கடை மேலாளர்களை மிரட்டி சட்டவிரோதமாக மது விற்றதாக மாதம் ரூ.3000 வாங்கியதாகவும் சுந்தரேசன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது புகாரளிக்க வந்த பெண்ணிடம், புகாரை வாங்காமல் செல்ஃபோன் எண்ணை வாங்கிக்கொண்டு பழகி வந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
தனக்கு பழக்கமான பெண்ணை உதவி ஆணையர் அலுவலகத்தில் வைத்து தரக்குறைவாக பேசி அடித்ததாகவும் புகார் எழுந்தது.
காவல் நிலையத்தில் இருந்த காவலர்களை தனக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ” என்று தெரிவித்திருக்கிறது.