இன்று வரலட்சுமி பூஜை: பூஜை நேரம், யாரெல்லாம் செய்யலாம்?
'வர' என்றால் வரம், 'லட்சுமி' என்றால் செல்வம். பக்தர்களுக்குத் தேவையான நன்மைகளை வழங்கும் வடிவாக லட்சுமி தேவி போற்றப்படுகிறாள்.
ஆடி அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஸ்ராவண(ஆவணி) மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி விரதமிருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் ஸ்ராவண மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கிறோம்.
வரலட்சுமி விரதத்தின் விதிகள் மிகவும் கடுமையானவை. இந்த விரதத்தை பெரும்பாலும் திருமணமான பெண்கள் (சுமங்கலிகள்) தங்கள் கணவர், குழந்தைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் மனமகிழ்ச்சிக்காக இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர். மேலும் செல்வம் பெருகப் பெண்கள் அஷ்ட லட்சுமிகளின் வடிவமான வரலட்சுமியை வணங்கி இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இந்து பாரம்பரியத்தின்படி, இந்த நாளில் வரலட்சுமி தேவியை வழிபடுவது, செல்வம், பூமி, ஞானம், அன்பு, புகழ், அமைதி, மனநிறைவு மற்றும் வலிமை ஆகிய எட்டு தேவியர்களில் ஒருவரான அஷ்டலட்சுமியை வழிபடுவதற்கு சமமாகும்.
இந்த ஆண்டு (2026) வரலட்சுமி விரதம் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) வருகிறது. சில பஞ்சாங்க கணக்கீடுகளின்படி ஆகஸ்ட் 28-ம்தேதி என்றும் குறிப்பிடப்பட்டாலும், தமிழ்நாட்டில் பெரும்பாலான நாட்காட்டி மற்றும் தகவல்களின்படி வரும் ஆகஸ்ட் 21-ம்தேதி வெள்ளிக்கிழமையே வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் முடிந்தவர்கள் முழு நேரமும் விரதம் இருந்தோ அல்லது விரதம் கடைபிடிக்காமல் வீட்டில் வரலட்சுமியை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம்.
சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் வரலட்சுமி பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
இந்நாளில் லக்ஷ்மி பூஜை செய்ய காலை சிம்ம லக்னம் (காலை 6:23 முதல் 7:48 மணி வரை), மதிய விருச்சிக லக்னம் (மதியம் 12:06 முதல் 2:20 மணி வரை) மற்றும் மாலை பிரதோஷ வேளையான கும்ப லக்னம் (மாலை 6:16 முதல் 7:52 மணி வரை) ஆகியவை மிகச் சரியான மற்றும் உகந்த நேரங்களாகும்.
காலையில் காலை 6:23 முதல் 7:48 மணி வரை வழக்கமான மற்றும் பாரம்பரியமான பூஜை செய்ய ஏற்றது. அதேபோல் மாலை 6:16 மணி முதல் 7:52 மணி வரை மகாலட்சுமியை வழிபட மிகவும் சக்திவாய்ந்த நேரம்.
அன்றைய தினம் காலையில் நீராடி வீட்டைச் சுத்தம் செய்து கோலமிட்டு, பூஜை அறையைத் அலங்கரிக்க வேண்டும். கலசம் வைத்து அதில் லட்சுமி தேவியை ஆவாசனம் செய்து லட்சுமிக்கு உகந்த பாடல்களை பாடி சிறப்புப் பூஜைகள் செய்யவேண்டும்.
பின்னர் அம்மனுக்குப் பிடித்தமான நைவேத்தியங்கள் படைத்து மஞ்சள் கயிறு (நோம்பு கயிறு) கட்டிக் கொள்வார்கள். லட்சுமிக்கு 1,3,5 அல்லது 9 என்ற எண்ணிக்கையிலேயே நைவேத்தியம் படைக்க வேண்டும்.
வீட்டிற்கு சுமங்கலிப் பெண்களை கூப்பிட்டு அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், சீப்பு, சிறிய கண்ணாடி, மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, மஞ்சள் கயிறு ஆகியவற்றை வைத்து தாம்பூலம் கொடுக்கலாம்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, வரலட்சுமி விரத வழிபாட்டினை சாதாரணமாக படம் வைத்து வழிபடுபவர்களுக்கு பிரச்னை கிடையாது. ஆனால் ஒருமுறை கலசம் வைத்து வழிபட துவங்கினால், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். ஒரு ஆண்டும் மட்டும் செய்துவிட்டு, அடுத்த ஆண்டு செய்யாமல் இருக்கக் கூடாது.
இந்த நாளில் வரலட்சுமியை வழிபடுவது எட்டு லட்சுமிகளையும் (அஷ்ட லட்சுமி) ஒன்றாக வழிபடுவதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. பெண்கள் சூரிய உதயத்தில் தொடங்கி பூஜை முடியும் வரை அல்லது நாள் முழுவதும் விரதம் இருந்து வழிபடுவர்.