லஞ்சப்பணத்துடன் குளத்தில் குதித்த விஏஓ!
கோவை பேரூர் வட்டாச்சியர் அலுவலகம் அருகே வாரிசு சான்றிதழ் பெற விவசாயிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் மாராத்தாள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவரது கணவர் இறந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெற மாராத்தாள் மத்துவராயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது மத்துவராயம்புரம் கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேல், வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சமாக வேண்டும் என கேட்டுள்ளார். முதல்கட்டமாக ஆயிரம் ரூபாயை மாராத்தாளிடமிருந்து வெற்றிவேல் வாங்கியுள்ளார். மீதம் உள்ள ரூ.4 ஆயிரம் கொடுத்தால் தான் சான்றிதழ் வழங்க முடியும் என வெற்றிவேல் கூறியுள்ளார். இது குறித்து மாராத்தாள் தனது மருமகன் கிருஸ்ணமூர்த்தியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கிருஸ்ணமூர்த்தி கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இரசாயனம் தடவிய ரூ.3,500 யை நோட்டுகளை கிருஸ்ணமூர்த்தியிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து பேரூர் வட்டாச்சியர் அலுவலகம் அருகே இரு சக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் வெற்றிவேலிடம் கிருஸ்ணசாமி பணத்தை கொடுத்தார். அப்போது இதனை கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வெற்றிவேலை மடக்கி பிடித்தனர். அப்போது திடிரென இருசக்கர வாகனத்தில் தப்பிய வெற்றிவேல் பேரூர் பெரியகுளத்தில் குதித்து லஞ்ச பணத்தை தண்ணீர் போட்டுள்ளார். பின் தொடர்ந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தண்ணீர் குதித்து வெற்றிவேலை பிடித்தனர். பேரூராட்சி ஊழியர்கள் உதவியுடன் குளத்தில் தேடியும் லஞ்சப் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வெற்றிவேல் லஞ்சம் வாங்கிய போது சாலை ஓரத்தில் இருந்த தனியார் வங்கி சிசிடிவி கேமரா காட்சிகள் , சட்டை பையில் இருந்த ரசாயனத்தை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு, லஞ்சம் வாங்குதல், தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.